‛மீம்ஸ்களால்தான் என் குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது...’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் முன்னாள் அனுபவம்!
ADMK Former Minister Jayakumar : ‛பார்த்தியா... தாத்தாவை எப்படியெல்லாம் மீம்ஸ் போடுறாங்கன்னு...’ சொல்லுவேன்.
காற்று இருக்கிறதோ இல்லையோ... எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது மீம்ஸ். பல மீம்ஸ்கள், ஒருவரின் செயல்பாட்டையே முடக்கியிருக்கிறது. இன்னும் சில மீம்ஸ்கள், முடங்கியிருந்தவர்களை எழ வைத்திருக்கிறது. சக்தி வாய்ந்த ஆயுதமாக மீம்ஸ் மாறியிருக்கும் இந்த வேளையில், இரு கட்டமாக அது உருவாகிறது.
அவ்வப்போது வரும் வைரல் கன்டண்ட் வைத்து போடப்படும் மீம்ஸ். அது, பெரும்பாலும் நிலையாக இருப்பதில்லை. புதிதாக ஒன்று வரும் போது, பழையது கடந்து விடும். ஒரு கட்டத்தில் அது மறந்து கூட போய்விடும். மற்றொன்று, எப்போதும் நிலைத்திருப்பது. ஏதாவது ஒரு செலிபிரிட்டி அல்லது கருத்து தெரிவிப்பவரை நோக்கிய மீம்ஸ். அது எப்போதும் அவரை குறி வைத்துக் கொண்டே இருக்கும்.
அவரது நடை, உடை, பேச்சு எல்லாமே மீம்ஸ் ஆக வந்து கொண்டே இருக்கும். அவருக்காக மீம்ஸ் போடுவதற்காகவே ஒரு தரப்பு இருப்பார்கள். அவர்கள் அவரை மட்டுமே பின் தொடர்வார்கள். இப்படி ஒரு குழுவாக மொய்க்கப்படும் மீம்ஸ் கண்டன்டர்களில் மிக முக்கியமானவர், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
தோல்விக்குப் பின் அவர் ஒதுங்கியிருந்தாலும் கூட , இன்னும் அவரை மீம்ஸ்கள் சூழ்ந்து கொண்டு தான் உள்ளன. சரி, அவர் அமைச்சராக இருந்த போது, மொபைல் போனை திறந்தாலே கொட்டும் மீம்ஸ்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம், தனியார் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலை பாருங்க...
‛‛மீம்ஸ்களை பார்த்து ரொம்ப ரசிப்பேன். நான் ரசிப்பது மட்டுமின்றி, என் குடும்பத்தில் உள்ள என் பேரன் பேத்திகளுக்கு அதை பார்வர்டு செய்வேன். ‛பார்த்தியா... தாத்தாவை எப்படியெல்லாம் மீம்ஸ் போடுறாங்கன்னு...’ சொல்லுவேன். அவங்களும் அதை ரொம்ப ரசிப்பாங்க. நானும் அதை ரொம்ப ரசிப்பேன். எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மீம்ஸ் போடுபவர்களும் ஒரு காரணம். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தொடர்ந்து மீம்ஸ் போடுங்க. அதை ஆரோக்கியமா போடுங்க. கோவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி மீம்ஸ் போடக்கூடாது. அடிப்படையில் நான் விளையாட்டு வீரர். ஷாட்புட் நான் எறிந்தால் யாரும் கிட்டவே வரமுடியாது. எறி விளையாட்டுகளில் நான் எப்போதும் கில்லி. நான் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால், ஒருவேளை விளையாட்டு பக்கம் போயிருப்பேன்,’’ என்று ஜெயக்குமார் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
மீம்ஸ் போட்டு பேமஸ் ஆனவர்களை விட, மீம்ஸால் பேமஸ் ஆனவர்கள் தான் அதிகம். அது கத்தி மாதிரி, பயன்படுத்தும் கரங்களை பொருத்து மாறுபடும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்