மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அவர் மீது புகார் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதை விசாரித்து வந்தனர்.
விசாரணையின் முடிவில் தற்போது அவர் மீது இரு புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயநல்லதம்பி என்பவர், கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜியிடம், பலருக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதாக தன்னிடம் அவர் கூறியதாகவும், அதன் அடிப்படையில் பலரிடமிருந்து பணம் பெற்று ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்ததாகவும், 'நான் பலரிடம் வாங்கி கொடுத்த 3 கோடி ரூபாயை ராஜேந்திர பாலாஜி திரும்பி தரவில்லை' என, விஜயநல்லதம்பி, விருதுநகர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என ராஜேந்திர பாலாஜி முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு முன் ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதற்கிடையே அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிடக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை 8 தனிப்படையினர் ஒன்பதாவது நாளாக தேடிவருகின்றனர்.
ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அவரை எப்படியாவது கைது செய்தாக வேண்டும் என தமிழ்நாடு காவல் துறை தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் ஆறு வங்கிக்கணக்குகளை முடக்கி தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்தால் குற்றநடவடிக்கை: என்ன சொல்கிறது புதிய விதி? முழு விபரம் இதோ!