FlashBack: வடிவேலு மறுத்து விஜய் ஹிட் அடித்த ‛துள்ளாத மனமும் துள்ளும்’... வடிவேலு குட்டி... சிம்ரன் ருக்கு... ஜஸ்ட் மிஸ்!
துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்குநர் எழில், சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸ் என்ற படத்தின் பாதிப்பிலிருந்து உருவாக்கியிருந்தார்.
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்க்கு ஆர்மப காலத்தில் பெரும் ஹிட்டான படங்களில் துள்ளாத மனமும் படத்திற்கு பெரும் இடம் இருக்கிறது.
இயக்குநர் எழில் இயக்கியிருந்த இப்படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்த இப்படம் 1999ஆம் ஆண்டு வெளியானது.
குட்டி, ருக்கு என்ற இரண்டு கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு இன்றுவரை ஃபேவரைட். ஆனால் விஜய் நடித்த குட்டி கதாபாத்திரத்திற்கு முதலில் இயக்குநர் எழில் அணுகியது நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவை.
துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்குநர் எழில், 1931ஆம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸ் என்ற படத்தின் பாதிப்பிலிருந்து உருவாக்கியிருந்தார். சிட்டி லைட்ஸ் படத்தில் சார்லி சாப்ளின் பார்வை திறனற்ற பெண்ணின் மீது காதலில் விழுந்திருப்பார்.
எனவே அந்த பாத்திரத்திற்கு வடிவேலு சரியாக இருப்பார் என நினைத்து அவரிடம் எழில் கதை கூறினார். கதையை கேட்ட வடிவேலுவுக்கு கதை பிடித்துப்போக இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கம் அவரை தடுத்தது.
இதனையடுத்து, “இவ்ளோ நல்ல கதையாக இருக்கிறது. இதில் நான் நடித்து கெடுக்க விரும்பவில்லை. ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள். அப்போதும் இதே மனநிலையில் நீங்கள் இருந்தால் நிச்சயம் இப்படத்தில் நடிக்கிறேன்” என எழிலிடம் கூறியிருக்கிறார்.
இந்த சூழலில் படத்தை தயாரிக்க முன்வந்த சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தன்னிடம் விஜய்யின் தேதி இருப்பதாகவும், அவருக்கேற்றவாறு கதையை மாற்றி காட்சிகள் எழுத எழிலிடம் கோரிக்கை வைத்தார்.
வடிவேலுவுக்காக எழுதப்பட்டிருந்த துள்ளாத மனமும் துள்ளும் கதையில் காமெடி தூக்கலாக இருந்தது. விஜய்க்காக கதையிலும், காட்சிகளிலும் சிறிய மாற்றத்தை செய்து உணர்வுப்பூர்வமான் காட்சிகளை அதிகப்படுத்தினார். இதனையடுத்து, விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் படம் எடுக்கப்பட்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.
குட்டி கதாபாத்திரத்தில் காதல், ஆக்ஷன், சென்ட்டிமெண்ட் ஆகிய காட்சிகளில் விஜய் நடித்து துள்ளாத மனமும் துள்ளும் படத்தை ஒரு க்ளாசிக் படமாக நிலைநிறுத்தினாலும், வடிவேலு நடித்திருந்தால் அந்தப் படம் ஆகச்சிறந்த காமெடி கலந்த காதல் படமாக அமைந்திருக்கும் என்பது ஒரு தரப்பினரின் கருத்தாக இருக்கிறது.
இதேபோல், கவிஞர் வாலி கதை, வசனம் எழுதிய ‘இளையராஜாவின் மோதிரம்’ என்ற படத்திலும் வடிவேலு கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் ஆரம்பத்திலேயே நின்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்