Cervical Cancer Vaccine: இந்தியாவின் முதல் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி: தமிழ்நாட்டில் அளிக்க ஏற்பாடுகள் தீவிரம்..
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசியை 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு வழங்க தமிழ்நாட்டில் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசியை 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு வழங்க தமிழ்நாட்டில் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகளவில் பெண்கள் மத்தியில் அதிக அளவில் ஏற்படும் நான்காவது புற்றுநோயாக கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை அது இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மார்பகப் புற்றுநோய் உள்ளது.
உலகளவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான். அதேபோல, உலகளவில் கர்ப்பப்பை புற்றுநோயால் நடக்கும் நான்கு உயிரிழப்புகளில் ஒரு உயிரிழப்பு இந்தியாவில் நிகழ்கிறது. கர்ப்பப்பை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து திறம்பட சிகிச்சை அளித்தால் அதை தடுக்கலாம். குணப்படுத்தலாம்.
பெரும்பாலான நேரங்களில் இந்த புற்றுநோய், ஹ்யூமன் பாப்பிலோமா (HPV) என்னும் வைரஸால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் தாக்கப்படுவதற்கு முன்பே, HPV தடுப்பூசியை செலுத்தினால், இந்த புற்றுநோயைத் தடுக்கலாம். இந்தியாவில் ஆண்டுதோறும் 80 ஆயிரம் பெண்கள் இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
மத்திய அரசின் தடுப்பூசி
கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க பள்ளிகளில் 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியை வழங்க தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை வழங்கிய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகா, மிசோரம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சிறுமிகளுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை விரைவில் இந்தத் திட்டத்தைத் தொடங்க உள்ளது.
பள்ளிச் சிறுமிகளின் விவரங்கள் சேகரிப்பு
9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்குப் பள்ளிகளிலும் அங்கன்வாடி மையங்களிலும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்பட உள்ளது. இதற்காக பள்ளிச் சிறுமிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்தத் திட்டத்துக்கான விதிமுறைகள் இதுவரை வெளியிடப்படவில்லை. மாவட்ட சுகாதார அலுவலர்களுக்குப் போதிய விவரங்கள் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது?
சுமார் 70 சதவீத கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் HPV வகை 16 மற்றும் 18-ல் ஏற்படுகிறது. 31, 33, 45, 52 மற்றும் 58 ஆகிய அதிக ஆபத்துள்ள HPV வகைகளால் கூடுதலாக 10 முதல் 20 சதவீதம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. SII இன் டெட்ராவலன்ட் அல்லது குவாட்ரைவலன்ட் HPV தடுப்பூசியானது 6, 11, 16 மற்றும் 18 ஆகிய செரோடைப்களின் L1 வைரஸ் போன்ற துகள்களை (VLPs) உள்ளடக்கியது. நான்கு வெவ்வேறு வைரஸ்கள் அல்லது பிற நுண்ணுயிரிகள் போன்ற நான்கு வெவ்வேறு ஆன்டிஜென்களுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதன் மூலம் குவாட்ரைவலன்ட் தடுப்பூசி செயல்படுகிறது.
உதாரணமாக, கார்டசில் என்பது நான்கு வகையான HPV களின் தொற்றுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கும் ஒரு குவாட்ரிவலன்ட் தடுப்பூசி ஆகும். இதற்கிடையில், கார்டசில் 9 என்பது ஒன்பது மருந்து கொண்ட தடுப்பூசி ஆகும், இது HPV 6, 11, 16, 18, 31, 33, 45, 52 மற்றும் 58 ஆகிய ஒன்பது வகைக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

