Migjam Cyclone: நாளை வங்கக்கடலில் உருவாகும் ‘மிக்ஜாம்’ புயல்.. தமிழகத்தை தாக்குமா? முழு விவரம் இதோ..
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மிக்ஜாம் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. அக்டோபர் மாதம் தொடங்கி இருந்தாலும் தீவிரமடையாமல் இருந்தது. கடந்த வாரம் முதல் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார். கடந்த வாரம் முதல் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குற்றிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில நேற்று (27-11-2023) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (29-ஆம் தேதி) வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு மியான்மர் நாடு பரிந்துரை செய்த ‘மிக்ஜாம்’ என்ற பெயர் சூட்டப்படும். இந்த புயலானது தமிழ்நாட்டிற்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தலவல் இன்னும் வெளியாகவில்லை. மிக்ஜாம் புயல், டிசம்பர் 5 ஆம் தேதி கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் இது கிழக்கு இந்தியா, மியான்மர் பங்களாதேஷ் நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு எந்த அளவு தாக்கம் இருக்கும் என்பது குறித்து அடுத்த இரண்டு தினங்களில் மிக துள்ளியமாக தெரிய வரும்.
நாளை வங்கக்கடலில் உருவாகும் புயல் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடல் பகுதிகள்:
இன்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
30.11.2023: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய வங்கக் கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
01.12.2023: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 28-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.