TN Rain Alert: வெளிய கிளம்புறீங்களா? அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - எந்தெந்த பகுதிகளில்?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான அல்லது லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும், நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 30 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், தேனி, நீலகிரி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி நவம்பர் 2 ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் தீவிரம்:
மேலும் நாளை முதல் வட கிழக்கு பருவமழை தீவிரமடையும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை தென்மேற்கு பருவமழை இயல்பை ஒட்டி இருந்த நிலையில் வட கிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக பதிவாகி உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் மழை கணக்கீடும் காலம் முறையில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 78.8 மி.மீ மழை பெய்துள்ளது. ஆனால் இந்த காலகட்டத்தில் இயலான மழை அளவு 129.9 மி.மீ. ஆகும். இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 39% குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.