![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Aavin Milk Price Hike : ஆவின் பால் விலை கிடுகிடு உயர்வு.. மாதாந்திர அட்டைதாரர்களுக்கு அல்ல.. வேறு யாருக்கு? முழு விவரம் இதோ...
தமிழ்நாட்டில் சில்லறை விற்பனையில் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ 12 உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
![Aavin Milk Price Hike : ஆவின் பால் விலை கிடுகிடு உயர்வு.. மாதாந்திர அட்டைதாரர்களுக்கு அல்ல.. வேறு யாருக்கு? முழு விவரம் இதோ... Aavin Hike Company informed price of orange milk packet has increased by Rs 12 per litre In Tamil Nadu Aavin Milk Price Hike : ஆவின் பால் விலை கிடுகிடு உயர்வு.. மாதாந்திர அட்டைதாரர்களுக்கு அல்ல.. வேறு யாருக்கு? முழு விவரம் இதோ...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/04/0f417cefeba6ededc296d76fffa0b2231667531626099571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் சில்லறை விற்பனையில் விற்கப்படும் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ 12 உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விற்கப்படும் அனைத்துவகை பாலின் விலையும் உயர்த்தப்படவில்லை, பழைய விலையே தொடரும் என்றும் ஆவின் தெரிவித்துள்ளது.
புதிய விலை மாற்றத்தின்படி, சில்லறை விற்பனையில் அரைலிட்டர் அளவில் விற்கப்படும் நிறைகொழுப்பு கொண்ட ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை ரூ 24-இல் இருந்து 30 ஆக உயரும் என்றும், ஒரு லிட்டர் பால் பாக்கெட் விலை ரூ.60 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலையை ஏற்றியதால் அதனை ஈடுக்கட்ட இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆவின் பால் விற்பனை விலை விபரம்#CMMKStalin |#TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @Avadi_Nasar @AavinTN pic.twitter.com/Hb40gN3S8U
— TN DIPR (@TNDIPRNEWS) November 4, 2022
இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்த 03.11.2022 நாளிட்ட செய்தி குறிப்பினை தொடர்ந்து, 05.11.2022 முதல் பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32 லிருந்து. ரூபாய் 35 ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41 லிருந்து, ரூபாய் 44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், பால் உற்பத்தியாளர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, தற்போதைய விலையை விட கூடுதல் விலைகொடுத்து, பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வதால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இருப்பினும் விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk. நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk, பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் எந்தவித மாற்றமுமின்றி தற்போதைய நிலையே தொடரும், தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46க்கே புதுப்பிக்கப்படும். எனவே, அட்டைதாரர்களுக்கு அனைத்துவித பாலின் விலையும் எந்தவித மாற்றமுமின்றி, அதே விலையில் விற்கப்படும். ஆனால், சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு ஆரஞ்சு பாலின் விலை மட்டும், லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60 ஆக 05:11.2022 முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்த விலை மாற்றம், உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடுசெய்யும் வகையில் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றத்திற்கு பின்னரும் ஆவின் நிறைகொழுப்பு பால் (அட்டை) தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ. 24 குறைவு, சில்லறை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ.10 குறைவு.
உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தபட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு நுகர்வோர்களும், சில்லறை விற்பனையாளர்களும், மொத்த விற்பனையாளர்களும் எப்போதும் போல் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்தழைப்பு நல்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)