குழந்தையை பலாத்காரம் செய்து எரித்த வழக்கில் திருப்பம்! தஷ்வந்த் விடுதலை- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கில், தஷ்வந்த் மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் vவிடுதலை செய்துள்ளது.
சென்னை, போரூர் அருகே 2017ஆம் ஆண்டு அண்டை வீட்டு 6 வயதுக் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குற்றத்தை உறுதி செய்ய முடியாத காரணத்தால், தஷ்வந்த்தின் தண்டனையை ரத்து செய்ததாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டையே உலுக்கியே சம்பவம்
சென்னை போரூர், அடுத்த மாங்காடு அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு, 6 வயது பாலியல் வன்கொடுமை செய்து உடலை எரித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்த் பெயரை அவ்வளவு எளிதில் தமிழ்நாடு மறந்திருக்காது. தஷ்வந்த் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அந்தக் குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கி இருந்தது.
இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு செங்கல்பட்டு நீதிமன்றம், தஷ்வந்த்துக்கு, 46 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் மற்றும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் மனுth தாக்கல் செய்திருந்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில்தான் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது. சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஎன்ஏ மாதிரிகள் போதிய அளவில் தஷ்வந்துக்கு எதிராக இல்லை என்பதாலும் முறையான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தாயைக் கொலை செய்த வழக்கிலும் விடுதலை
இதற்கிடயே தஷ்வந்த், தனது தாயை கொலை செய்த வழக்கில், அவரது தந்தை முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். இந்த வழக்கு செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தந்தையின் சாட்சி பிறழ் சாட்சியாக மாறியதால், கொலை வழக்கில் போதிய சாட்சி இல்லை எனக் கூறி தஷ்வந்த் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






















