வானிலை முன்னெச்சரிக்கை: உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - மிகக் கனமழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு இன்று உருவாக உள்ளதால் தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கக்கூடும். 11-ந் தேதி( நாளை மறுநாள்) கடலோரப் பகுதியில் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் கனமழை 11-ந் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
டெல்டா மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 10-ந் தேதி முதல் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் ( 20 செ.மீ. அளவுக்கு மேல்) பெய்யக்கூடும். 11-ந் தேதி ( நாளை மறுநாள்) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதர மாவட்டங்களிலும் பரவலாக மழை வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்சமாக நேற்று காலை நிலவரப்படி பெரம்பூரில் அதிகபட்சமாக 14 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதன் காரணமாக தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதைஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, வரும் 11-ந் தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்