NRI App: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி சிரமமின்றி புகார்களை பதிவு செய்யலாம்.. தமிழ்நாடு போலீஸாரின் புதிய முயற்சி..
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களின் புகார்களை பதிவு செய்ய, தமிழ்நாடு காவல் துறை தரப்பில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்களின் (என்ஆர்ஐ) நீண்டகால கோரிக்கையை நிவர்த்தி செய்து, புகார்களை பதிவு செய்யவும், அதன் நிலையை கட்டம் கட்டமாக கண்காணிக்க உதவும் செயலியை (ஆப்) தமிழ்நாடு போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இருந்து என்ஆர்ஐ பிரிவு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத்தில் தனி என்ஆர்ஐ பிரிவு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த முறைப்படி ஏப்ரல் 2022 இல் தொடங்கப்பட்டு ஜூலை 2022 முதல் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. என்.ஆர். ஐ பிரிவு, பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து நேரடியாக தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் தரப்பில் மனுக்களை பெற்று வந்தது. முன்னதாக, என்.ஆர்.ஐ.க்கள் தங்கள் புகார்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவது வழக்கம். இப்போது, இதனை எந்த சிரமமும் இல்லாமல் புகார்களை பதிவு செய்ய, காவல்துறை ஒரு பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், என்.ஆர்.ஐ டெஸ்க்டாப் செயலியில், மனுதாரர் தனது குறைகளை பதிவு செய்தவுடன், அவர்களுக்கென ஒரு பிரத்யேக ஐடி உருவாக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மனுவைப் பெற்ற பிறகு, மேல் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட நகரம் அல்லது மாவட்டத்திற்கு அனுப்பப்படும் முன், என்.ஆர்.ஐ பிரிவு அதைச் சரிபார்க்கும் என கூறப்பட்டுள்ளது. ” மாவட்டத்தில் உள்ள என்ஆர்ஐ பிரிவுக்கான நோடல் அதிகாரி, மனுவை சம்பந்தப்பட்ட துணைப் பிரிவுக்கு விசாரணைக்காக ஒதுக்குவார். விசாரணை அறிக்கை மற்றும் துணை ஆவணங்கள் அறிக்கையின் பக்கச்சார்பான தன்மையைக் கண்டறிய என்.ஆர்.ஐ பிரிவு அதிகாரிகளால் ஆராயப்படும். விசாரணை அறிக்கை தகுதியான அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, மனுதாரருக்கு என்ஆர்ஐ களத்தில் இருந்து விவரங்கள் அனுப்பப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்டத்திலும் மனுதாரர் பதிவு செய்த மின்னஞ்சல் மூலமாகவும், அவர்களின் தனிப்பட்ட அடையாளத்துடன் செயலியில் உள்நுழைவதன் மூலமாகவும் அவர்களின் புகாரின் நிலை குறித்த அறிவிப்பைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மனுதாரர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தலாம் https://www.nricell.tn.gov.in/ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், என்.ஆர்.ஐ பிரிவு கட்டுப்பாட்டு எண்ணான 044-28470025-க்கு அழைத்து சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.