(Source: ECI/ABP News/ABP Majha)
அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி? போட்டியின்றி தேர்வு செய்ய நிர்வாகிகள் திட்டம்..
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 9ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் 10ஆம் தேதி தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 9ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் 10ஆம் தேதி தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. எடப்பாடி தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில், இரு தரப்பு வாதங்களும் நீதிபதிகள் முன்பு வைத்தனர்.
இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, 2023ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதிக்கும், அதன் பின்னர் ஜனவரி 9ஆம் தேதிக்கும், வழக்கினை மீண்டும் ஒத்திவைத்தது. கடந்த 16ஆம் தேதி இரு தரப்பையும் எழுத்து பூர்வமான பதிலை கேட்டனர். மேலும் கடந்த 23ஆம் தேதி இந்த வழகிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின் மூலம் அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமியின் வசம் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் செல்லுப்படியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 9 -ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 10ஆம் தேதி தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி அதிமுக பொச்துச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் அதற்கான ஒப்புதல் பொதுக்குழுவில் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.