School Holiday: தமிழகத்தை அலறவிடும் 'டிட்வா' புயல்.! அடுத்தடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தை நோக்கி 'டிட்வா' புயல் நெருங்கி வரும் நிலையில், இன்று இரவு முதல் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கவுள்ளது. இதனையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தொடங்கிய பருவமழையினால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது. சில நாட்கள் மழை ஓய்ந்திருந்த நிலையில் நவம்பர் மாதம் இறுதியில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தென் மற்றும் வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இதனையடுத்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் 'டிட்வா' புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வரும் 30ஆம் தேதி முதல் கன மழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை நெருங்கும் புயல்
இந்தநிலையில் தமிழகத்தில் 'டிட்வா' புயல் நெருங்கி வரும் நிலையில் பல மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது வரை 3 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று காற்றுடன் மழை அதிகரித்துள்ளதாலும் மதியத்திற்கு பிறகு காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாலும் இன்று மதியம் முதல் இந்த 3 மாவட்ட பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை
நாளை தமிழகத்தில் ராமநாதபுரம், நாகை, தஞ்சை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாரக்கப்படுகிறது. மழையின் தாக்கத்தை பொறுத்து இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிடுவார் என பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.





















