TN Cabinet Meeting: தமிழ்நாட்டில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி... அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு..!
தமிழ்நாட்டில் புதிதாக 8 நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக 8 நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூட்டம் அக்டோபர் 31 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் எனவும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் விபரங்கள் தனியாக தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று (அக்டோபர் 31) மாலை 5 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறலாம் என தகவல் வெளியானது.
மேலும் நீண்ட நாள் சிறையில் உள்ல கைதிகள் விடுதலை, ஜனவரியில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு, ஈசிஆர் சாலை விரிவாக்கம், வடகிழக்கு பருவமழை தொடர்பான விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என சொல்லப்பட்டது.இதனிடையே 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி என்பது மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு தொகுப்பு சதவீத சலுகை வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. மேலும் தொழில் வளர்ச்சிக்கு சிறந்த துறைமுக கட்டுப்பாடு அவசியம். அதனால் தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் புதிதாக 8 நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க அனுமதி அளிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோவை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரூ.7 ஆயிரம் கோடி முதலீடு செய்வதன் மூலம் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்வெளி ஆராய்ச்சி,மின் வாகனம் தொடர்பான தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டில் வரவுள்ளது. திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு நிலம் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.