(Source: ECI/ABP News/ABP Majha)
Rain Alert: நாளையும் 4 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கன மழை: எச்சரிக்கையா இருங்க மக்களே! அதிக மழைப்பதிவு இங்குதான்!
வானிலை ஆய்வு மையம் நாளை 4 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை இன்று காலை வரை 5 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாளை நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்ததாவது:
”அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது அடுத்து வரும் இரண்டு தினங்களை பொறுத்தவரையில் தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். கனமழை குறித்த எச்சரிக்கையை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகனமழை எச்சரிக்கை தொடரும். விருதுநகர் தேனி மாவட்டங்களில் மிக கனமழையும், நீலகிரி கோவை திருப்பூர் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக் கூடும். ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். நாளை நெல்லை குமரி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் குமரிக்கடல் மன்னார்குளைகுடா மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதிகளில் 40 முதல் 42 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழை அளவு 44 சென்டிமீட்டர். இந்த காலகட்டத்தின் சராசரி அளவு 42 சென்டிமீட்டர் இது ஐந்து சதவீதம் இயல்பை விட அதிகம். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக முதன் முறையாக வரலாறு காணாத மழை பெய்துள்ளது”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 4, 5 தினங்களுக்கு மழையின் அளவு எப்படி இருக்கும் என்பது குறித்த கேள்விக்கு, மழையை செண்டி மீட்டர் அளவில் கணிக்க முடியாது என்றும், ஆனால் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க