கொரோனா பாதிப்பு: தஞ்சையில் 16 பள்ளிகளுக்கு பரவல்
தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக 12ம் வகுப்பு தவிர பிற வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இரு பள்ளிகளில் கொரோனா தொற்று ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும் தொடர்பில் இருந்தவர்களுக்கும், பிற பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, தஞ்சையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை நேற்று 14 ஆக இருந்த நிலையில், இன்று 16 ஆக அதிகரித்திருப்பது பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 243 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 120 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பரவலுக்கு காரணமான 16 பள்ளிகளுக்கும் தலா ரூபாய் 5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.