Tamil Nadu Rain Update: தமிழ்நாட்டில் கொட்டித் தீர்த்த மழையின் நிலை என்ன?அமைச்சர் விளக்கம்!
சென்னையில் 10 சுரங்கப் பாதைகளில் மழைநீர் மொத்தமாக வெளியேற்றப்பட்டுவிட்டது. 75 இடங்களில் மரங்கள் விழுந்திருந்தன அவை அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டுவிட்டன - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் முழங்கால் மற்றும் இடுப்பளவு மழைநீர் தேங்கியது. வீடுகளிலும் நீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் சராசரியாக 605.7 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது சென்னையில் மட்டும் 79.13 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. கடந்த 1ஆம் தேதி முதல் 8ஆம் தேதிவரை வழக்கத்தைவிட 44% அதிகமாக மழை பொழிந்துள்ளது.
கடலூர், கரூர், விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வழக்கத்தைவிட 60 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 889 பேர் 40 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 451 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் 10 சுரங்கப் பாதைகளில் மழைநீர் மொத்தமாக வெளியேற்றப்பட்டுவிட்டது. 75 இடங்களில் மரங்கள் விழுந்திருந்தன அவை அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டுவிட்டன.
கடந்த 24 மணி நேரத்தில் மழைக்கு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இறந்த நான்கு பேரில் இருவர் மதுரையையும் இருவர் தேனியையும் சேர்ந்தவர்கள்16 கால்நடைகள் இறந்துள்ளன. மேலும் 263 வீடுகள் சேதமடைந்துள்ளன.
பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்புத் துறை தயாராக வைக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை மேற்கொள்ள 2,115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 பம்புகள் மற்றும் 3 ஆயிரத்து 915 மின்சார மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது.
வெள்ளத்தில் அடித்துச் செல்பவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க தமிழகத்தில் மொத்தம் 87 இடங்களில் ஹெலிபேட் உள்ளது. அவை அனைத்தும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பொழியும் அளவு கணக்கிடப்பட்டு ஏரிகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. தொடர்ந்து இதே முறைதான் கடைபிடிக்கப்படும். 9-ஆம் தேதிக்குள் அனைத்து மீனவர்களும் கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்