திமுக ஆட்சியின் ஹீரோ அணில் மட்டுமே: யானை... புலியும் சேரலாம்... - முன்னாள் எம்.பி., கே.பி ராமலிங்கம் பேட்டி!
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம், திமுக அரசின் 100 நாள் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம், உறுப்பினர்களை சந்தித்து சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.பி ராமலிங்கம்,
‛‛தமிழகத்தில் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதமரின் 7 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக கூறினார். பயிர் காப்பீடு திட்டத்தில் நாடு முழுவதும் 9.42 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்; தமிழகத்தில் மட்டும் 70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு கொண்டுவந்ததாக தி.மு.க பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. நாடு முழுவதும் 2016 வரை 27 சதவீதமாக இருந்த ஏழ்மை மக்கள் தற்போது 8.4 சதவீதமாக உள்ளதாகவும், மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
வரும் 5 ம் தேதி மேகதாது அணை கட்டுவதை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் பா.ஜ.க சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சையில் நடைபெறும்,’’ என்று கூறினார்.
மின் கணக்கீடு விவகாரத்தில் அமைச்சர் உளறுகிறார்; மின்தடையை ஏற்படுத்தும் புதிய அணில் இனத்தை செந்தில்பாலாஜிதான் கண்டுபிடித்துள்ளார். எதுவும் தெரியாதா அமைச்சர்களைப் பற்றி மக்கள் ஒரு ஆண்டில் புரிந்து கொள்வார்கள் என்றார்.
பெட்ரோல் டீசல் விலை மாநில அரசு வரியிலிருந்து தான் குறைப்பதாக திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது, தமிழகத்தின் பொருளாதார நிலையை சொன்ன தேதியில் வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். வெளிநாட்டில் படித்த பொருளாதாரத் துறை அமைச்சருக்கு இதைக்கூட செய்ய முடியவில்லை என்றார், மேலும் 100 நாள் தி.மு.க ஆட்சியில் ஸ்டாலின் கதாநாயகன் அல்ல; அணில்தான் கதாநாயகன் ஆகி உள்ளது. இனி வரும் நாட்களில் யானை, புலி கூட கதாநாயகன் ஆகலாம். ஆனால் ஸ்டாலின் ஆக மாட்டார் என்று கடுமையாக விமர்சித்தார்.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் அனைத்து துறைகளிலும் ஊழல் குறையவில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த அதே புரோக்கர்கள் தான் இப்பொழுதும் இருக்கிறார்கள். இதுவரை இல்லாமல் காண்ட்ராக்டர்ஸ் கூட்டம் போட்ட நெடுஞ்சாலை துறை அமைச்சர், திமுகவில் மட்டும் தான் உள்ளார் என்றார்.
தமிழகம் அனுமதிக்காதவரை காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட முடியாது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கூறியதை சுட்டிக்காட்டினார். தமிழகம் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே உள்ள நதி நீர் பிரச்சினையை தீர்க்க சட்ட ரீதியான அதிகாரம் படைத்த நதிநீர் ஆணையத்தால்தான் முடியும்; அரசியல் அதிகாரத்தால் அல்ல என்று முன்னாள் எம்பி கேபி ராமலிங்கம் கூறினார்.