(Source: ECI/ABP News/ABP Majha)
Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 1,25,000 கன அடியில் இருந்து 80,000 கன அடியாக குறைவு..
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 80,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளது. இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,25,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1,25,000 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 80,000 கன அடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர் மட்டம் 120.00 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 89 வது ஆண்டாக மே 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.5 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 25,000 கன அடியாக உயர்ந்தது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் 57,000 கன அடி 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 80,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.62 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.20 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 32,050 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 33,780 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 64.53 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.21 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 7,798 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 8,425 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.