(Source: Poll of Polls)
ஓசூரில் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் மனைவியை கொன்ற கணவரால் பரபரப்பு...!
ஓசூரில் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தேன் சரணடைந்த கணவர் பரபரப்பு வாக்குமூலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரி எம்ஜிஆர் சாலையில் வசிக்கும் ஜோதிஸ் (28) இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருக்கும் கர்நாடக மாநிலம் ஜிகினியை சேர்ந்த வந்தனாவுக்கும் (25) கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததுள்ளது. இந்த தம்பதிக்கு 6 வயதில் லத்தீஷ் என்கிற மகன் உள்ளான். மனைவி வந்தனாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஜோதிஸ் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மனைவி வந்தனாவை கழுத்தை நெரித்து கொன்ற ஜோதிஷ், ஓசூர் டவுன் காவல்நிலையத்தில், மனைவியை கொலை செய்து விட்டேன் என கூறி காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.
இதுகுறித்து ஓசூர் நகர காவல்துறையினரிடம் ஜோதிஷ் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகா ஜிகினி பக்கமுள்ள மதப்பட்டினா ஜோகிர் தெருவை சேர்ந்த யசோதா என்பவரின் மகள் வந்தனாவுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு லத்தீஷ் வயது (6) மகன் உள்ளான்.திருமணம் ஆனது முதல் எங்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். அந்த நேரம் எனக்கு மருந்து, மாத்திரைகளை எடுத்து வர எனது மெக்கானிக் கடையில் வேலை செய்து வரும் சுகில் வயது (25) என்பவர் உதவியாக இருந்துவந்தார். அவர் அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து மருந்து, மாத்திரைகளை கொடுத்து செல்வார்.
அப்போது சுகில் எனது மனைவியிடம் சிறிது நேரம் பேசி விட்டு செல்வார். இந்தநிலையில் சில நாட்களில் அவர்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதுகுறித்து எனக்கு தெரியவந்ததும், நான் எனது மனைவி வந்தனாவை கண்டித்தேன்.திருமணம் ஆகி கணவர், குழந்தை உள்ள நிலையில் இப்படி வேறு ஒருவருடன் கள்ளதொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்று அவளை நான் எச்சரித்தேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு என்னுடன் கோபித்து கொண்டு கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகா ஜிகினியில் உள்ள அவளது பெற்றோர் வீட்டிற்கு வந்தனா சென்று விட்டாள்.
அதனைத்தொடர்ந்து வந்தனா, சுகிலுடன் சென்று விட்டாள். இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ஜிகினி காவல் நிலையத்தில் மாயமானதாக புகார் கொடுத்தேன். எனது மனைவி ஓசூரில் இருக்கும் தகவல் அறிந்து அவளை மீட்டு ஜிகினி காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். இதன் பிறகு மாயமான வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.பின்னர் எனது மனைவியுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அவளை அழைத்து கொண்டு ஓசூருக்கு வந்தேன். இனிமேலாவது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என எண்ணினேன். ஆனால் வந்தனாவோ தொடர்ந்து என்னுடன் தகராறு செய்து வந்தாள்.
கழுத்தை நெரித்து கொன்றேன் காலையில் என்னுடன் தகராறு செய்த வந்தனா, வீட்டில் இருந்து மீண்டும் வெளியே செல்ல முயன்றாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான், கள்ளத்தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து என்னுடன் பிரச்சினை செய்து வருகிறாளே என எண்ணி, அவளை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற நான் ஓசூர் நகர காவல்நிலையத்தில் சரண் அடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஜோதிசை காவல்துறையினர் ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.