"திரை நடிகர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வை மத்திய அரசு நடத்தும் தேதி அறிவித்தவுடனே, மாநில அரசும் நடத்த தயாராகிவிடும் எனவும் கூறினார்.

சேலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, தமிழகத்தில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டம் மாவட்டத்திற்கு ஒரு இடத்தில் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபாதை கண்டறியப்பட்டு, அதில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏற்படுத்தி கொடுப்பார்கள். மேலும் அங்கு மரங்கள் நடப்பட்டு, இருக்கை வசதிகள் ஏற்படுத்தி மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு தினசரி ஒரு வாடிக்கையாக மாறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
நிதிநிலை அறிவிப்புகளில் ஒன்றான அறிவிப்பு எண் 60 படி சிறுநீரக செயலிழப்பு பரிசோதனை திட்டம் சேலத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சிறுநீரக பாதிப்பு என்பது பரவலாகி கொண்டு வருகிறது. பல்வேறு நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவத்துறையை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், மக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் தான் நடப்பும் நலம் பெறுவோம் திட்டமும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இதயம் காப்போம் திட்டத்தை தொடர்ந்து சிறுநீரக செயலிழப்பு பரிசோதனை திட்டம் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2,286 உள்ள அனைத்திலும் இன்று முதல் செயலாக்கத்திற்கு வருகிறது எனவும் பேசினார்.
அனைத்திந்திய மருத்துவ கலந்தாய்வில் ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிப்பு குறித்த கேள்விக்கு, மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது, கூடுதல் நன்மை தான் இருக்கும், 15 சதவீதத்திற்கான கலந்தாய்வு மத்தியஅரசு நடத்தும், அதை நடத்தி முடித்தபிறகு 85 சதவீதத்திற்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்துவோம். கலந்தாய்வு நடத்துவதற்கான காலநேரம் சரியாக இருக்கும். மத்திய அரசு கலந்தாய்வு குறித்து தேதி அறிவிப்பு வெளியிட்டவுடன், மாநில அரசும் அதற்கு தயாராகி விடுவோம். இந்த நிலையில் விண்ணப்பித்ததற்கான கடைசி நாள் முடிந்த நிலையில், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று கூடுதலாக இரண்டு நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
குட்கா பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது என்ற கேள்விக்கு, உயர்நீதிமன்றத்தின் விலக்கு கிடைத்தபோது, அதை எதிர்த்து தமிழக அரசு சட்டரீதியான போராட்டம் நடத்தி மீண்டும் தடையணையை பெற்றுள்ளோம். அரசாணை வெளியிட்டு தடையானை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை, உள்ளாட்சி நிர்வாகம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியோரை ஒன்றிணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் தடை இல்லாததால் அங்கிருந்து எளிதாக கடத்திவரும் சூழல் உள்ளது. காய்கறிகள், பழங்கள் கொண்டுவரும் வாகனத்தில் வைத்து கடத்தி வருகிறார்கள். அதனால் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் ஆலோசனை நடத்தி விற்பனை செய்தால், எந்த மாதிரியான தண்டனைகள் கிடைக்கும் என்பது குறித்து எடுத்துக் கூறியுள்ளோம். எனவே இதையும் தாண்டி நடைபெறுவது குறித்து அரசிடம் அறிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், அறிவிப்பவர்களின் விவரம் ரகசிய காணப்படும் போதைப்பொருட்கள் விற்பனை குறித்து தெரியவந்தால் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
தேசிய மருத்துவ கழகம் சார்பாக இந்தியா முழுவதும் 140 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவழக்கமான ஒன்றுதான். சிசிடிவி கேமரா திரும்பி இருந்தது, பயோ மெட்ரிக் வேலை செய்யவில்லை என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இரண்டு மூன்று கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதற்கான உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், திரைப்படங்களின் தாக்கம் இளைஞர்களிடம் அதிகமாக உள்ளது. இதனை உணர்ந்து திரை நடிகர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் நன்மையான கருத்துக்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் போதும் என்றார். தமிழகத்தை பொறுத்தவரை பணி நேரத்தில் மருத்துவர்கள் வருவதை மட்டுமே கண்காணிக்கப்படும். பணி நேரம் இல்லாத நேரங்களில் கிளினிக் வைத்து செயல்படுவதற்கு தடை இல்லை. தமிழகத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 சதவீதம் மருத்துவர்கள் சரியாக இருப்பார்கள். இருப்பினும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

