ஏற்காட்டில் கடும் சத்தத்துடன் நில அதிர்வா..? - பொதுமக்கள் பீதி
ஏற்காடு அண்ணா பூங்கா, மான் பூங்கா, படகு சவாரி இல்லம், கரடியூர், மஞ்சகுட்டை மற்றும் சேர்வராயன் மலைப்பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுவட்டார பகுதியில் மிகப்பெரிய அளவில் சத்தம் கேட்டு லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த நில அதிர்வானது காலை 11 மணி அளவில் உணரப்பட்டதாக ஏற்காடு பொதுமக்கள் தெரிவித்தனர். ஏற்காடு அண்ணா பூங்கா, மான் பூங்கா, படகு சவாரி இல்லம், கரடியூர், மஞ்சகுட்டை மற்றும் சேர்வராயன் மலைப்பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த லேசான அதிர்வால் கடைகள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் மின்விசிறி, டிவிக்கள் அனைத்து பொருட்களும் அதிர்ந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சேலம் மாவட்ட வானிலை மற்றும் நில அதிர்வு கண்காணிப்பாளர் இடம் கேட்டபோது, சிறிய அளவிலான ஜெட் விமானங்கள் கீழாக பறப்பதினால் ஏற்பட்ட அதிர்வு. நிலநடுக்கம் ஏதும் ஏற்படவில்லை. ஏற்கனவே காணும் பொங்கல் அன்று டேனிஷ்பேட்டை, தீவட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மதிய வேளையில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக பொதுமக்கள் கூறினர். ஆனால் அதுவும் நில அதிர்வு கண்காணிப்பு இயந்திரத்தில் பதிவாகவில்லை. சிறிய அளவிலான விமானங்கள் பறப்பதினால் ஏற்படும் சத்தமாகும். மக்கள் இதனால் பீதியடைய தேவையில்லை என்றும் அவர் கூறினார்.