அரசு பள்ளியில் விடைத்தாள் தயார் செய்யும் பணியில் மாணவிகள் - தலைமை ஆசிரியை உட்பட 2 பேர் சஸ்பெண்ட்
மாணவிகள் கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விடைத்தாள் தைய்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சேலம் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அடுத்த வாரத்தில் 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. அதற்காக மாணவ மாணவிகள் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு உள்ளதாக காலை 8 மணிக்கு பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பயிலக்கூடிய மாணவிகளை விடைத்தாளில் முகப்பு தாள் தைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனால் மாணவிகள் தேர்வுக்கு தயாராகாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவிகளை பணி அமர்த்திய ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மீது கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
மாணவிகள் கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விடைத்தாள் தைய்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில், மாணவிகளை வைத்து முகப்பு பக்கம் தைத்த விவகாரத்தில், தலைமை ஆசிரியை தமிழ்வாணி மற்றும் சிறப்பாசிரியர் (தையல்) செல்வி ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார். தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்