கடனை செலுத்தி விட்டு மனைவியை அழைத்து செல்; வங்கி அதிகாரிகளின் செயலால் கணவர் அதிர்ச்சி
வீட்டில் கணவர் இல்லாதால் மனைவியை தன்னுடன் வருமாறும், தவணை தொகை செலுத்தி விட்டு உனது கணவர் அழைத்து செல்லட்டும் என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் கௌரி சங்கரி என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குடும்ப கஷ்டம் காரணமாக வாழப்பாடியில் உள்ள தனியார் வங்கியில் ரூபாய் 35 ஆயிரம் பணம் கடன் பெற்று இருந்தார். வாரம் 770 ரூபாய் வீதம் 52 வார தவணைகளில் பணத்தை திருப்பி செலுத்தும் வண்ணம் கடன் பெற்று இருந்தாக கூறப்படுகிறது. இன்னும் 10 வார தவணை பாக்கி உள்ளதாக தெரிகிறது .
இந்த நிலையில், நேற்று முன்தினம் வங்கி பெண் ஊழியர் பிரசாந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேரில் தவணை வசூல் செய்ய சென்ற ஊழியர், பிரசாந்த் வீட்டில் மதியம் முதல் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. வீட்டில் கணவர் பிரசாந்த் இல்லாதால் வீட்டில் இருந்த மனைவி கௌரி சங்கரி தன்னுடன் வருமாறும், தவணை தொகை செலுத்தி விட்டு உனது கணவர் அழைத்து செல்லட்டும் என்று கூறி அவரை அழைத்து கொண்டு வங்கி கிளைக்கு வந்துள்ளார்.
இதுகுறித்து கௌரி சங்கரி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தவணை தொகை பணத்தை கட்டிவிட்டு சீக்கிரம் என்னை அழைத்து செல்லுங்கள் என கூறியதால் அதிர்ச்சி அடைந்த பிரசாந்த் வாழப்பாடி போலீஸ் துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த்திடம் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸ் துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் உத்தரவின் பேரில் நேரில் சென்ற வாழப்பாடி காவல்துறையினர் இரவு 8 மணி வரை வங்கி செயல்பட உங்களுக்கு அனுமதி அரசு கொடுத்துள்ளதா? என வங்கி மேலாளரரிடம் கேட்டபோது, மாத கடைசி என்பதால் இரவு அலுவலகம் மூட நேரமாகும் என தெரிவித்தார். மேலும் லோன் தவணை தொகை பணத்தை கட்டிவிட்டு மனைவியை கூட்டி செல்லுங்கள் என்று கூறியது எனக்கு தெரியாது என்று தெரிவித்தார். இரவு 7.30 மணியளவில் பிரசாந்த் போலீசார் முன்னிலையில் 770 ரூபாய் பணத்தை செலுத்தி விட்டு மனைவி கௌரி சங்கரியை மீட்டு சென்றார். இரவு நேரம் என்பதால் இரண்டு தரப்பினரையும் விசாரிக்க காலையில் நேரில் வரச்சொல்லி விட்டு காவல்துறையினர் அங்கிருத்து சென்றனர்.
மாலை 6 மணிக்கு மேல் வாடிக்கையாளர்களை பணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என்ற ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இரவு 07.30 மணி வரை மனைவியை வங்கியில் அமரவைத்து கணவனிடம் பணத்தை வசூல் செய்த தனியார் வங்கி மீது ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இரவு நேரத்தில் கடன் தவணையை செலுத்தி விட்டு மனைவியை மீட்டு சென்ற கணவன் குறித்த இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது ஒரு மனித உரிமை மீறல் எனவும் வங்கியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.