விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மேலும் 2 லட்சம் புதிய முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கத்தை நிறுவ மோடி அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பால்வளம், மீன்வளக் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து புதியதாக நிறுவப்பட்டுள்ள 10,000 வேளாண் கூட்டுறவு சங்கங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரான அமித் ஷா, டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி அமித் ஷா தமது உரையைத் தொடங்கினார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலித்த அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துரைத்தார்.
10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடக்கம்:
பிரதமராக இருந்தபோது வாஜ்பாயின் தொலைநோக்கு தலைமை இந்தியாவின் எழுச்சிக்கு அடித்தளமாக அமைத்தது என்று அவர் கூறினார். பழங்குடியினர் விவகாரங்களுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியது, 'தங்க நாற்கர' நெடுஞ்சாலைகளை உருவாக்கியது போன்ற அடல் ஜியின் மாற்றத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகளையும் அமித் ஷா குறிப்பிட்டார்.
10,000 புதிய பன்னோக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியான 86 நாட்களுக்குள் அவை வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளது என்று அமித் ஷா எடுத்துரைத்தார். பிரதமர் மோடி, கூட்டுறவு அமைச்சகத்தை நிறுவியவுடன், கூட்டுறவினர் மூலம் வளம் என்ற குறிக்கோளை அறிமுகப்படுத்தினார் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த தொலைநோக்குப் பார்வையை அடைய ஒவ்வொரு பஞ்சாயத்திலும் கூட்டுறவு சங்கம் தேவை என்று அமித் ஷா வலியுறுத்தினார். தொடக்க கூட்டுறவு சங்கங்கள் இந்தியாவின் மூன்று அடுக்கு கூட்டுறவு கட்டமைப்பின் அடித்தளம் என்று அவர் விளக்கினார்.
அமித் ஷா பேசியது என்ன?
அதனால்தான் மத்திய அரசு 2 லட்சம் புதிய தொடக்க வேளாண் கடன் சங்கங்களை நிறுவ ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். கூட்டுறவு அமைப்புகளின் கணினிமயமாக்கல் பல்துறை முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
10 கூட்டுறவு சங்கங்களுக்கு ரூபே கிசான் கடன் அட்டைகள், மைக்ரோ ஏடிஎம்களை விநியோகித்தார். தற்போது நடைபெற்று வரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு தொடக்க பால் பண்ணையிலும் மைக்ரோ ஏடிஎம் விரைவில் பொருத்தப்படும் என்று அவர் கூறினார்.
புதிய மாதிரி விதிகளை ஏற்றுக்கொள்வது பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், பழங்குடியினரின் தீவிர பங்கேற்பை உறுதி செய்வதையும், சமூக - பொருளாதார சமத்துவத்தை வளர்ப்பதையும், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதையும் உறுதி செய்கிறது என்று அவர் கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 2 லட்சம் புதிய முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கம் நிறுவ மோடி அரசு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளதாகவும், இந்த இலக்கு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அடையப்படும் என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.