![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Salem Leopard: கோழிகளை வேட்டையாடிய சிறுத்தை... வெளியான சிசிடிவியால் சேலம் மக்கள் அச்சம்
பட்டியில் இருந்த 3 கோழிகளை சிறுத்தை பிடித்து சென்றது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பு ஏற்படுவது.
![Salem Leopard: கோழிகளை வேட்டையாடிய சிறுத்தை... வெளியான சிசிடிவியால் சேலம் மக்கள் அச்சம் Salem Leopard people are scared by the released CCTV footage leopard that hunted chickens - TNN Salem Leopard: கோழிகளை வேட்டையாடிய சிறுத்தை... வெளியான சிசிடிவியால் சேலம் மக்கள் அச்சம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/11/0180c9fa890d66a3f74b84bcb7d6fead1712830468109113_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பக்கநாடு, கோம்பைக்காடு பகுதியில் மாதையன் என்பவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். தினசரி காலை மேய்ச்சலுக்கு கால்நடைகளை அனுப்பி பின்னர் மாலை வீட்டின் அருகில் மாடுகளை கட்டி வைத்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 10 ஆம் தேதி மாடுகளை கட்டி வைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை மாதையன் எழுந்து பார்த்தபோது ஒரு மாடு காணாமல் போனதை கவனித்தார். உடனடியாக அருகில் தேடிய போது மாட்டை மர்ம விலங்கு வேட்டையாடியது தெரிய வந்தது.
உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் விரைந்து வந்த வனத்துறையினர் மாதையன் வீட்டின் அருகில் கேமராவை பொருத்திச் சென்றனர். மேலும் அங்கு ஒரு கூண்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில் மறுநாள் காலை வனத்துறையினர் வைக்கப்பட்ட கேமராவை ஆய்வு செய்தபோது சிறுத்தை அதே இடத்திற்கு மீண்டும் வந்தது தெரியவந்தது. இதன் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் தென்படாததால், சிறுத்தை மாற்று பாதையில் சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேத்துகுழி, ஒட்டங்காடு, குழிக்காடு, புதுவேலமங்கலம் பகுதிகளில் விவசாயிகள் சிறுத்தையை பார்த்ததாக கூறியுள்ளனர். இந்த பகுதியில் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறி ஆடுகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதனால் விவசாயிகள் வீட்டை விட்டு மாலை நேரங்களில் வெளியே வராமல் அச்சமடைந்தனர். சிறுத்தை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விட வேண்டும் என மேட்டூர் வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அருகே உள்ள வெள்ள கரட்டூரில் விவசாயி சுரேஷ் நிலத்தில் கட்டியிருந்த ஆட்டை சிறுத்தை கடித்து கொன்றது. அதேபோல், அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் பட்டியில் இருந்த 5 செம்மறியாடுகளை சிறுத்தை கடித்து கொன்றது. இதுகுறித்து தகவலறிந்த வனச்சரக அலுவலர் சிவானந்தம் தலைமையில் வனவர் ராஜேஷ் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க 2 கூண்டுகளை வைத்து, இரவு ரோந்து பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் சிறுத்தை வந்த நிலையில் பொதுமக்கள் டார்ச் அடித்ததால் வெளிச்சத்தை பார்த்து, கூண்டில் சிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடியது. வெள்ள கரட்டூர் முதலியார் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரது வீட்டின் அருகே இருந்த பட்டியில் இருந்த 3 கோழிகளை சிறுத்தை பிடித்து சென்றது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பு ஏற்படுவது.
தொடர்ந்து, 5வது நாளாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அச்சத்தில் இருக்கும் பொதுமக்கள், வனத்துறை சிறுத்தையை விரைந்து பிடிக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். இரவு நேரங்களில் காட்டுப்பகுதி அருகாமையில் உள்ள கிராமங்களில் சிறுத்தை நடமாடி வருவதால் அங்கிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். குழந்தைகளை பெற்றோர்கள் இரவு நேரத்தில் வெளியே அனுப்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். வெள்ள கரட்டூர், புதுவேலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)