மயிலுக்கு ஸ்பிரேயர்... மான்களுக்கு இயற்கை குடில்... கோடை வெயிலில் இருந்து விலங்குகளுக்கு ரிலாக்ஸ்
சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் உள்ள வன விலங்குகள், பறவைகள் கோடை காலத்தில் நிலவும் வெயிலால் பாதிக்கப்படாமல் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் வன விலங்குகள், பறவைகள் ஆகியவை வெயிலினால் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மயில்களுக்கு பனி போல நீர் தெளிப்பு, விலங்குகளுக்கு நீர்ச்சத்து உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

கோடை காலம் தொடங்கியதால், சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகல் நேர அதிகபட்ச வெப்பம் 100 டிகிரியை எட்டிவிட்டது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. இரவிலும் காற்றின் ஈரப்பதம் குறைந்து வெம்மையான சூழல் நிலவுகிறது. இதனால், மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு இளநீர், குளிர்பானங்கள் அருந்துவது, குளிர்ந்த நீரில் குளிப்பது, வீடுகள், அலுவலகங்களில் குளிர்சாதன அறையில் இருப்பது என பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் வனத்துறை சார்பில் வன விலங்குகள், பறவைகளுக்கு, கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, புள்ளி மான், கடம்பு மான் உள்பட விலங்குகளுக்கு தர்ப்பூசணி, வெள்ளரி உள்பட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உணவாக கொடுக்கப்படுகின்றன. குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் மயில் மற்றும் அரிய வகை வெள்ளை மயில் ஆகியவை இருக்கும் நிலையில், அவை வெயிலால் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், நீரை பனிபோல தெளிக்கும் ஃபாக்கர் இயந்திரம் பொருத்தப்பட்டு, வெயில் நேரத்தில் மயில்களுக்கு நீரை பனிபோல தெளிக்கவிடப்படுகிறது. இது பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்திழுப்பதாகவும் இருக்கிறது. இதனிடையே, பூங்காவில் புள்ளி மான், கட மான், சாம்பார் மான் ஆகியவை அதிக எண்ணிக்கையில் இருக்கும் நிலையில், அவற்றுக்கு வெயில் நேரத்தில் இளைப்பாற வசதியாக, இயற்கைப் புற்களால் ஆன நிழற்குடில் அமைக்கப்பட்டுள்ளது. வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் மான்கள், இந்த நிழற்குடிலை தேடி, அமர்ந்து இளைப்பாறுகின்றன. இதேபோல், விலங்குகள், பறவைகள் அனைத்துக்கும் போதுமான அளவில் குடிநீர் இருப்பதை, பூங்கா பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் செல்வகுமார் கூறுகையில், சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் 21 வகைகளில் 264 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்காவில் உள்ள வன விலங்குகள், பறவைகள் கோடை காலத்தில் நிலவும் வெயிலால் பாதிக்கப்படாமல் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கோடையின் வெப்பம் முன்கூட்டியே அதிகமாக இருப்பதால், சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். குறிப்பாக, மயில் மற்றும் அரிய வகை வெள்ளை மயில்கள் வெயிலால் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், நீரை பனிபோல தெளிக்கும் ஃபாக்கர் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. புள்ளி மான், கட மான், சாம்பார் மான் ஆகியவை அதிக எண்ணிக்கையில் இருக்கும் நிலையில், அவற்றுக்கு வெயில் நேரத்தில் இளைப்பாற வசதியாக, இயற்கைப் புற்களால் ஆன நிழற்குடில் அமைக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பூங்காவில் உள்ள வன விலங்களும், பறவைகளும் பாதிக்கப்படாமல் இருக்க, பூங்கா பணியாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்" என்றார்.





















