Vinayagar Chaturthi 2024: விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கூடாது - சேலம் ஆட்சியர் அதிரடி
ஊர்வலத்தின் போது காவல்துறையின் அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் எக்காரணத்தைக் கொண்டும் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை.
![Vinayagar Chaturthi 2024: விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கூடாது - சேலம் ஆட்சியர் அதிரடி Salem District Collector instructions Firecrackers should not be burst in Ganesh procession - TNN Vinayagar Chaturthi 2024: விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கூடாது - சேலம் ஆட்சியர் அதிரடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/30/44e925d50603b1329c398e22fc27380c1725012291185113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பேசிய மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, "விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது சட்டம் ஒழுங்கினைப் பராமரித்திடவும், விநாயகர் சிலை அமைப்பாளர்கள் சிலைகள் நிறுவுவதற்கு மாநகராட்சி பகுதியினைப் பொறுத்தவரையில் தொடர்புடைய காவல் உதவி ஆணையர்களிடமும், ஊரகப் பகுதிகளில் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோர்களிடமும் உரிய அனுமதி பெற்று நிறுவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை:
மேலும், சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சிலைகள் நீர்நிலைகளை மாசுபடுத்தாத இயற்கை வண்ணங்களை மட்டுமே பூசப்பட்டிருக்க வேண்டும். இரசாயன வர்ணப் பூச்சு மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகளை பயன்படுத்தக்கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து அதிகபட்சம் 10 அடிக்கும் மேலாக இருக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் எளிதில் தீப்பற்றக்கூடியப் பொருட்களைக் கொண்டு மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்கக்கூடாது. குறிப்பாக இதர மத வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் சிலைகளை நிறுவுதல் கூடாது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தொடர்புடைய அமைப்பினரால் நிறுவப்படும் ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரமும் சிலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்கும் வகையில் பொறுப்பாளர்களை நியமித்திட வேண்டும். மாநகராட்சி பகுதியினைப் பொறுத்தவரையில் தொடர்புடைய காவல் உதவி ஆணையர்களிடமும், ஊரகப் பகுதிகளில் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோர்களிடமும் அதன் விவரங்களைத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிக்கத் தடை:
விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்கும் சிலைகள், காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். மேலும், ஊர்வலத்தில் பட்டாசு வெடிகள் போன்றவைகளை உபயோகிக்கக் கூடாது. குறிப்பாக ஊர்வலத்தின் போது காவல்துறையின் அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் எக்காரணத்தைக் கொண்டும் ஊர்வலம் செல்ல அனுமதிக்கக் கூடாது.
விநாயகர் ஊர்வலம்:
ஊர்வலம் அமைதியாக நடத்தி முடித்திட ஊர்வலத்தை நடத்துகிற பொறுப்பாளர்கள், முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், நான்கு சக்கர வாகனங்களான மினி லாரி, டிராக்டர் போன்றவற்றில் மட்டுமே சிலைகள் விசர்ஜனத்திற்காக எடுத்துச் செல்லப்பட வேண்டும். மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுவப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் உதவி ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர்களால் வரையறுக்கப்பட்ட கால அளவிற்குள் விசர்ஜனம் செய்யப்படவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
ஊர்வலத்தின் போது காவல்துறையினர் மூலம் தேவையான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியின் போது சட்டம் ஒழுங்கினைப் பராமரித்திட அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)