Salem: சேலத்து மக்களே! ஆங்கிலேய வரலாற்றை இன்றும் தாங்கி நிற்கும் மாநகரம் - ஓர் அலசல்
சேலம் மாநகரில் ஆங்கிலேயர் காலத்தில் சூட்டப்பட்ட பெயர்கள் இன்றும் அவர்களின் நினைவாக அவர்களின் பெயர்களாலே அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருச்சிக்கு நிகரான ஒரு மிகப்பெரிய நகரம் சேலம் ஆகும். தமிழ்நாட்டின் அரசியல் களத்திலும் சரி, திரைக்களத்திலும் சரி சேலத்தின் பங்கு மிகப்பெரியது ஆகும். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோர் தங்களது அரசியல் மற்றும் சினிமா பயணத்திற்கான அடித்தளத்திற்காக அதிக நேரத்தை செலவிட்டது இதே சேலத்தில்தான் ஆகும்.
இயற்கை வளம், தொழில்வளம் என பல பெருமைகளை கொண்ட சேலம் ஆங்கிலேயர்களின் ஆட்சியிலும் தவிர்க்க முடியாத நகரமாகவே இருந்தது. அதற்கான அடையாளங்களாகவே சேலத்தின் பல பகுதிகளின் பெயர்களும் இன்றும் அவர்களது பெயர்களிலே உள்ளது. அவற்றை கீழே விரிவாக காணலாம்.
பிரட்ஸ் சாலை:
1853 முதல் 1862 வரை சேலம் கலெக்டராக இருந்தவர் ஹேரி அகஸ்டஸ் பிரட்ஸ். இவரது நினைவாக கலெக்டர் ஆபீஸ் முதல் முள்ளுவாடி கேட் வரையிலான சாலைக்கு பிரட்ஸ் சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
லாங்லி சாலை:
1870 முதல் 1881 வரை கலெக்டராக பதவி வகித்தவர் சி.டி.லாங்லி . இவரின் நினைவாகவே செவ்வாய்பேட்டை மார்க்கெட் பகுதி சாலைக்கு லாங்லி சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
லீ பஜார்:
1914 முதல் 1919 வரை கலெக்டராக இருந்த லீ. அப்போது இவர் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு, தனியாக ஒரு மார்கெட் பகுதியை உருவாக்கினார் .இந்த பஜாருக்கு அவர் பெயரே சூட்டப்பட்டது. இதன் காரணமாகவே இன்றும் அந்த பஜார் லீ பஜார் என அழைக்கப்படுகிறது.
செரி சாலை:
1857 முதல் 1866 வரை சேலம் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் J.W.செரி. இவர் நீதிபதியாக இருந்தபோது நீதி துறைக்கென சேலம் மாவட்டம் முழுவதும் ஏராளமான கட்டிடங்கள் கட்டினார் . சிறப்பாக பணியாற்றிய அவரின் நினைவாக சேலம் அஸ்தம்பட்டி முதல் வள்ளுவர் சிலை வரை உள்ள சாலைக்கு செரி ரோடு (Cherry Road) என பெயரிடப்பட்டது.
பால் மார்க்கெட்:
ஆங்கிலேயர் காலத்தில் சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் பால். இவர் காய்கறி மற்றும் பால் வியாபாரத்திற்காகவே தனியாக ஒரு மார்கெட் பகுதியை உருவாக்கினார் . அதன் காரணமாக அதற்கு பால் மார்க்கெட் என்று பெயர் சூட்டப்பட்டது. இன்றும் அவரின் பெயரிலேயே பால் மார்கெட் என்றே அந்த மார்க்கெட் அழைக்கப்படுகிறது.
ஜான்சன்பேட்டை:
சேலத்தின் கருவாட்டுப் பாலம் பகுதியில் வசித்துவந்த மக்களின் குடிசைகள் வெள்ளம் வரும் போதெல்லாம் அடித்து செல்லப்பட்டு வந்தது. ஆங்கிலயே காலத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்த ஜான்சன், அப்போது அந்த மக்களுக்காக ஒரு பேட்டையை உருவாக்கினார் . அதை ஜான்சன்பேட்டை என்று குறிப்பிட்டனர். இன்றும் அந்த பெயராலே ஜான்சன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.
சேலத்தை ஆட்சி செய்த ஆங்கிலேய அதிகாரிகள் பலர் ஓய்வுக்கு பிறகும் சேலத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் கல்லறைகள் இன்றும் சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே கால்நடை மருத்துவனை அருகிலும், ஏற்காட்டிலும் உள்ளன. பழமையான சேலத்தின் பல பகுதிகளிலும் இன்றும் ஆங்கிலேயர்கள் நினைவாகவே அழைக்கப்படுவதை சேலம் மக்கள் பெருமையாக கருதுகினறனர்.