சேலம்: மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
உயிரிழந்த கணவரின் மரணத்தில் உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க மனைவி வேண்டுகோள்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (36). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சக்திவேல் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பாலையில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று பிற்பகலில் சக்திவேல் இரும்பாலையில் உள்ள 5 வது நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வந்தார். நேற்று பிற்பகல் 3.10 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் ஐந்தாவது நுழைவாயில் பகுதிக்கு சென்று பார்த்த போது, சக்திவேல் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்ட சக காவலர்கள், இரும்பாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக உயிர் இழந்து விட்டார்.
இதுகுறித்து இரும்பாலை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், சக்திவேலின் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் சொந்த ஊரான பெரிய குளத்திற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சக்திவேல், தான் வைத்திருந்த இன்சாஸ் ரக துப்பாக்கியை கீழ் தாடையில் வைத்து மேல் நோக்கி சுட்டுக் கொண்டுள்ளார். இதில் துப்பாக்கி குண்டு தாடையை துளைத்துக்கொண்டு மேல் புறம் இடது கண் வழியாக வெளியேறி இருக்கின்றது. இதில் இடது கண் பகுதி முழுமையாகவே சேதம் அடைந்தது தெரியவந்துள்ளது.
சக்திவேல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பதால் அதற்கான காரணம் குறித்து இரும்பாலை காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனக்கு விடுப்பு வழங்காததால், மனைவி மற்றும் குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு மன உளைச்சலில் இருந்த காவலர் சக்திவேல் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும். எனவும், இரண்டு நாட்களுக்குள் ஊருக்கு வருவதாக சொன்ன கணவர் தற்போது தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், உரிய விசாரணை செய்து கணவன் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)