ரவீந்திரநாத் விவகாரம்; அதிமுகவினர் உண்மைகளை எவ்வாறு மறைப்பார்கள் என்பதற்கு இது சான்று - ஜவாஹிருல்லா
வரவிருக்கும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்ட செயல்பாடுகளை மோடி அரசு மேற்கொள்கிறது. இது ஒரு தேர்தல் வித்தையாகவே தெரிகிறது.
வேட்புமனு தாக்கலின்போது பொய்யான தகவல்களை அளித்ததற்காக தேனி மக்களவை உறுப்பினரான அதிமுக-வைச் சேர்ந்த ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிமுக-வினர் உண்மைகளை எவ்வாறு மறைப்பார்கள் என்பதற்கு இது சான்று என தமமுக மாநில தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்தார்.
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமமுக மாநில தலைவர் ஜவஹர்லால் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து ஜவாஹிருல்லா எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது மாநில சட்டத் துறை அமைச்சர் கிடப்பில் உள்ள வழக்குகள், மசோதாக்கள் குறித்து ஆளுநருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடித்தத்துக்கு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சில வழக்குகள் தொடர்பாக சில விவரங்கள் தேவை என கேட்டிருப்பது வியப்பளிக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சிக்கு எதிராக ஆளுநர் உள்நோக்கத்துடன் எதிராக செயல்படுகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
மத்திய அரசு சட்ட ஆணையம் மூலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மக்களின் கருத்துகளை கேட்டுள்ளது. போபாலில் நடந்த பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியாவுக்கு 2 சட்டங்கள் இருக்க முடியாது. ஒரே சட்டம் தேவை என பேசியிருக்கிறார். அவர் வகிக்கும் பதவிக்கு இந்த கருத்து கண்ணியத்தை அளிப்பதாக இருக்காது. சட்ட ஆணையத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரதமர் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது. ஏற்கெனவே சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்டபோது, கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கை, ‘பன்முகத் தன்மை கொண்ட நம் இந்திய நாட்டுக்கு பொது சிவில் சட்டம் தேவையில்லை’ என்று தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்ட செயல்பாடுகளை மோடி அரசு மேற்கொள்கிறது. இது ஒரு தேர்தல் வித்தையாகவே தெரிகிறது. பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கூறும்போது, பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் பொது சிவில் சட்டம் இல்லாமல் சிறப்பாக வாழ்ந்து வந்திருக்கிறது. இந்த சட்டம் கொண்டு வருவது என்பது ஆர்எஸ்எஸ் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தான். இந்த சட்டம் இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயின், சுய மரியாதை திருமணம் செய்பவர்கள் போன்றோருக்கும் எதிரானது. நம் நாட்டில் 98 சதவீதம் பொதுவான சட்டங்கள் தான் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி குளிர் காய பாஜக இந்த சட்டம் கொண்டுவர முயற்சிக்கிறது. இது நாட்டுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய முயற்சியாக உள்ளது. அனைத்து அரசியல் கட்சியினரும் இதை எதிர்த்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற அதிமுக துணை போகாமல் உறுதியாக இருக்க வேண்டும். வரும் தேர்தலில் பாஜக-வை வீட்டுக்கு அனுப்புவோம்.
அமைச்சரை பதவியை விட்டு ஆளுநர் நீக்கியதாக இதுவரை வரலாறு இல்லை. அதைச் செய்த பெருமை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியையே சேரும். தமிழ்நாட்டின் சர்வாதிகாரியாக அவர் செயல்படுகிறார். தமிழக ஆளுநர் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதே மாநில உரிமைகளை நேசிக்கக் கூடிய அனைவரின் விருப்பமாக உள்ளது. அவர்கள் தமிழகத்தில் இருந்து விரட்டப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.