‛திமுக துணைத் தலைவர் தான் காரணம்’ -புலியூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் மீண்டும் ரத்தானதால் கம்யூ., வேட்பாளர் அப்செட்!
‛’போதிய உறுப்பினர்கள் வராததற்கு முழுக்காரணம், திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி துணைத்தலைவர் அம்மையப்பன் தான்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் வேட்பாளர் கலாராணி குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புலியூர் பேரூராட்சி 8வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் அடங்கியப்பன் போட்டியின்றி தேர்வான நிலையில், 14 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 12 இடங்களிலும், 1வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கலாராணி, 4வது வார்டில் பாஜக வேட்பாளர் விஜயகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைவர் பதவி ஒதுக்கப்ட்டது. புலியூர் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த மார்ச் 4 ஆம் தேதி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி தலைவர் பதவி வேட்பாளர் கலாராணி வந்திருந்த நிலையில், திமுகவினர் அவரது பெயரை முன்மொழியாமல் திமுகவைச் சேர்ந்த 3வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியை தலைவராக முன்மொழிந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி தலைவர் வேட்பாளரான கலாராணி உள்ளிட்ட வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடாததால் புவனேஸ்வரி போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்ய கட்சி தலைமை வலியுறுத்தியதை அடுத்து தலைவர் பதவியை புவனேஸ்வரி ராஜினாமா செய்தார். இதையடுத்து தமிழக அளவில் காலியாக உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெற்றது.
இதில் புலியூர் பேரூராட்சி கூட்டரங்கில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் தயாராக இருந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் விஜயகுமார் மட்டுமே வந்திருந்தார். அதன்பிற்கு துணைத் தலைவரும், திமுக பேரூர் செயலாளருமான அம்மையப்பன் வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் வேட்பாளர் கலாராணி வந்தார். அவரை யாரும் முன்மொழியாததாலும், வழிமொழியாததாலும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை.
காலை 10 மணி வரை துணைத் தலைவர் உள்ளிட்ட 3 பேர் மட்டுமே வந்திருந்ததாலும் தேர்தல் நடத்தும் அலுவலர் 10 நிமிட கூடுதல் அவகாசம் வழங்கியும், 8 உறுப்பினர்கள் கூட வருகை தராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த மார்ச் 26ம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலுக்கும் முன்மொழிய போதிய வார்டு உறுப்பினர்கள் வராததால், புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திமுகவினர் ஒற்றை நபருக்காக இவ்வாறு செயல்படுவது கண்டிக்கத்தக்கது எனவும், போதிய உறுப்பினர்கள் வராததற்கு முழுக்காரணம் துணைத்தலைவர் அம்மையப்பன் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் வேட்பாளர் கலாராணி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தை முன்வைத்து, பாஜக சார்பில் புலியூர் பேரூராட்சி அலுவலகம் முன் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 'ஏமாற்றும் திராவிட மாடல்' என்ற பெயரில் கரூர் மாவட்ட பாஜக தாந்தோணி கிழக்கு ஒன்றியம் சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பே சுவரோட்டி ஒட்டப்பட்டுள்ளது. புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலையொட்டி பசுபதிபாளையம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.