மக்கள் குறைதீர் கூட்டம்: சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 6 பேர் தீக்குளிக்க முயற்சி
’’திங்கட்கிழமைகளில் ஆட்சியர் அலுவலங்களில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களுக்கு வரும் பொதுமக்கள் தீக்குளிக்க முயலும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது’’
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவரது மனைவி நதியா (35), இவர்களுக்கு சரண்யா (15) என்ற மகள் உள்ளார். ரமேஷ் தனது வாலிப வயதில் ரவுடியாக இருந்ததால் அவரை போலீசார் ரவுடி பட்டியலில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரமேஷ் மனம் திருந்தி கூலிவேலை செய்துவருவதாக கூறுகிறார். தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதால், தமிழகத்திலுள்ள ரவுடிகளை அதிரடியாக காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தினர் ரமேஷை விசாரணை என்றபேரில் அழைத்துசென்று பொய்வழக்கு போட்டு துன்புறுத்துவதாக கூறுகிறார். ரமேஷ் தனது மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தபோது, ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் திடீரென்று 3 பேரும் தங்கள்மீது மண்ணெண்னை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல், சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த சீனிவாசன் மனைவி செந்தாமரை என்பவர், தனது தனவரின் குடும்பத்தினர் தன்னிடம் இருந்து பிரித்து அவரக்கு வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வதாக கூறி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பரபரப்பு முடிவதற்குள் சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த நங்கவள்ளியில் உள்ள சூரப்பள்ளி என்ற கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், தங்களுக்கு குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் மின்சார வசதி அமைத்துத் தரவேண்டும் என்று கிராம மக்கள் ஒன்று கூடி சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர், அப்போது பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் ஊர் மக்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். மேலும் ஊர் மக்களில் ஒரு சிலரை மட்டும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஊர் மக்கள் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களில் இருவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் உடனடியாக அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்களில் மக்கள் ஈடுபட்டு வருவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சிறிய அளவிலான தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.