தண்ணீர் பாய்ந்தும் கருகும் நெல் பயிர்கள்; விவசாயிகள் வேதனை- என்ன காரணம்?
தருமபுரி அருகே தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக குறிப்பிட்ட சில வயல்களில் மட்டும் நெல் பயிர்கள் திடீரென காய்ந்து கருகுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
![தண்ணீர் பாய்ந்தும் கருகும் நெல் பயிர்கள்; விவசாயிகள் வேதனை- என்ன காரணம்? Paddy crops wilting despite lack of water; Farmers' agony - what is the reason? தண்ணீர் பாய்ந்தும் கருகும் நெல் பயிர்கள்; விவசாயிகள் வேதனை- என்ன காரணம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/08/157e027f6237f7ac50b7ca1832cd2ca01696768625017332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தருமபுரி அருகே தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக குறிப்பிட்ட சில வயல்களில் மட்டும் நெல் பயிர்கள் திடீரென காய்ந்து கருகுவதாகவும், ஆண்டுக்கு ரூ.60,000 முதல் ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அணை அருகே ஏராளமான விவசாயிகள் பல்வேறு வகையான விவசாயம் செய்து வருகின்றனர். இதில் சரவணன், பெருமாள் என்ற விவசாயிகள், தொடர் மழையால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிலத்தை உழுது, நெல் பயிர் நடவு செய்துள்ளனர். அங்கு தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சரவணன், பெருமாள் ஆகிய விவசாயிகளின் ஒரு சில வயல்களில் தண்ணீர் இருந்தும், பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் பயிர்களை பிடுங்கிக் கொண்டுபோய், உரக்கடைகளில் புகார் தெரிவித்துள்ளனர். அப்பொழுது அந்த பயிர்களை தண்ணீரில் வைத்துப் பார்த்த உரக்கடையினர், வேர் பிடிப்பதாகக் கூறி அதற்கு மாற்று உரத்தினை வழங்கி உள்ளனர். இதனைத் தெளித்தால் பயிர்கள் உயிர்ப்பிக்கும் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் தெரிவித்தது போலவே, விவசாயிகள் வயலில் தெளித்து தண்ணீர் பாய்ச்சியுள்ளனர். ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், தொடர்ந்து பயிர்கள் முழுவதுமாக காய்ந்து கருகி வருகின்றன. இது அனைத்து வயல்களும் இல்லாமல், குறிப்பிட்ட சில வயல்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயிரிடக்கூடிய பயிர்கள் பாதியிலேயே காய்ந்து கருகி வருகின்றன.
இந்த வயல்களில் பயிரிடப்படுகின்ற கருப்பு, நெல் போன்ற பயிர்கள் காய்ந்து கருகி விடுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். என்ன காரணம் என்று தெரியாமமே பயிர்கள் காய்ந்து வருவதால், ஆண்டுதோறும் இந்த வயல்களில் பயிர்களை விவசாயம் செய்யும் நிலையில், ஆண்டுக்கு 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே வேளாண் துறை அதிகாரிகள் இந்த வயல்களை நேரில் ஆய்வு செய்து மண்ணை பரிசோதனைக்கு உட்படுத்தி, பயிர்கள் காய்வதற்கான காரணத்தை தெரியப்படுத்தினால், அதனை சரி செய்வதற்கு வசதியாக இருக்கும். அதேபோல் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு வகையில் நட்டம் அடைந்து வரும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மொரப்பூர் வட்டார வேளாண் துறை அலுவலர் பழனியிடம் கேட்டபொழுது, ’’கே.ஈச்சம்பாடி அணை பகுதிகளில் விவசாய பயிர்கள் குறித்து எந்த புகாரும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. தற்பொழுது சம்பந்தப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் ஆய்வு செய்து, மண்ணை பரிசோதனைக்கு உட்படுத்தி அதற்கான காரணங்கள், கண்டறியப்படும். அதற்கு தகுந்தாற்போல் வயல்களை மாற்றிப் பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படும்’’ என தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)