செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு முதல்வரே காரணம் - ஹெச்.ராஜா
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு காரணம் கடந்த 2014 ஆம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குளித்தலையில் சுமத்திய குற்றச்சாட்டுகளே காரணம் என ஹெச்.ராஜா பேட்டி.
பாஜகவின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் பத்தாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது வீட்டின் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜாக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழக பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரமேஷ் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படாதது கடும் கண்டனத்துக்குரியது என்றார். ஆடிட்டர் ரமேஷ் படுகொலை நடந்த காலகட்டத்தில் நிகழ்ந்த மற்ற கொலைகளிலும் இதேநிலைதான் நீடிப்பதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல்துறை தற்போது சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடும் பாஜக நிர்வாகிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையின் பிடியில் சிக்குவார் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். இதற்கு பொன்முடி மீது ஏற்கனவே அமலாக்கத்துறையில் வழக்கு இருந்ததே காரணம் என்று கூறிய அவர், இதேபோன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீதும் வழக்குகள் உள்ளது என்றும், அமலாக்கத் துறையின் பிடியில் இருவரில் ஒருவர் அடுத்து சிக்குவார் என்றும் தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு காரணம் கடந்த 2014 ஆம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குளித்தலையில் சுமத்திய குற்றச்சாட்டுகளே காரணம் என்று கூறினார். ஏற்கனவே வழக்குகள் இருக்கின்ற அடிப்படையில் தான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கிறது தவிர இதில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஏதும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து இரங்கல் கூட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா,”தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்துக்களுக்கு இதுவரை திராவிட கட்சிகள் மூலம் நியாயம் கிடைக்கவில்லை. தமிழகத்தில் இருப்பது முஸ்லிம் பயங்கரவாதம். நாடு முழுவதும் நக்சலைட் இருக்கிறார்கள் நக்சலைட் ஹிந்து பயங்கரவாதம் என்று சொல்லவில்லை, இதற்கு இந்துமத ஆதரவு இல்லை. நக்சலைட் பொருளாதார பயங்கரவாதிகளாக தான் கருதுகிறோம். குறிவைத்து இந்து தலைவர்களை கொலை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது இஸ்லாமிய பயங்கரவாதம் தான். இந்துக்கள் இறந்தால் தமிழகத்தில் அழுவதற்கு ஆளே இல்லை அந்த அளவிற்கு மோசமான சூழ்நிலை இருந்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு மாலை போட்டு மரியாதை செய்கின்ற கும்பல் அரசியலில் இருப்பதால் தான். இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்து விரோத அரசு. இந்துக்களிடம் இதுவரை தமிழக முதல்வர் வந்து இந்துக்கான அரசு என்று சொல்லி உள்ளாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், “ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கொலை செய்த நபர்களை தண்டித்து விடக்கூடாது என்று அரசியல்வாதிகள் இருப்பது தமிழகத்தில் வன்மையாக கண்டிக்கத்தக்கது. யாரை கொலை செய்தாலும் சிறையில் இருந்தாலும் மூன்று இஸ்லாமியர்கள் தான் செய்வதாக கூறுகிறார்கள். எந்த ஒரு கொலை வழக்கிலும், கொலை செய்ய பயன்படுத்தி ஆயுதத்தை சமர்ப்பிக்கப்படவில்லை என்றால் வழக்கு நிற்காது. தமிழகத்தில் மோசமானவர் கையில் ஆட்சி, அதிகாரங்கள் உள்ளது. இந்து சக்திகளுக்கு எதிராக காவல்துறை அனாவசியமாக இறங்குமானால் அதையும் எதிர்கொள்ள தெரியும். அதிகாரிக்கு என்றால் துணிச்சல் இருக்க வேண்டும், தவறான செயலை செய்ய சொன்னால், அரசு அதிகாரிகள் செய்யமாட்டேன் என்று கூற வேண்டும், அப்படி யாரும் செய்யவில்லை. இதற்கு முன்பாக இருந்த சைலேந்திரபாபுவிற்கு சைக்கிளில் சென்று புகைப்படம் எடுத்து பகிர்வதற்கான தைரியமாவது இருந்தது. அந்த அளவிற்கு கூட வேறு அதிகாரிகளுக்கு தைரியம் இல்லை.
சமூக வலைதளங்களில் புகைப்படம் போட்டால் கூட எல்லோரும் கைது செய்யப்படுகிறார்கள். தமிழகத்தில் இன்னும் பத்து ஆண்டுகளில் இந்துக்கள் சிறுபான்மையாகும், இதற்கு திமுக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு தமிழகத்தில் மோசமான சூழல் இருந்து வருகிறது. தமிழக காவல்துறையினரால் எல்லோருக்கும் அநியாயம் செய்யப்படுகிறது. உண்மையை பேசினால் நீதிமன்ற அவமதிப்பு என்று கூறிவிடுவார்கள். வலிமை ஒன்றே வலி. பயத்தில் உள்ளவர்களுக்கு தைரியம் கொடுக்கவும், உறங்கிக் கொண்டு இருக்கின்ற அரசுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்பதற்காக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.