Mettur Dam Water Level: முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை... 11 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியைத் தாண்டியுள்ள நிலையில், மேட்டூர் அணையையொட்டி காவிரிக் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேட்டூர் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 23,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீர் அதிகளவில் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்த 27-ந் தேதி, 71 வது முறையாக எட்டியது.
இன்றைய நீர் நிலவரம்:
இதனிடையே நேற்று முன்தினம் முதற்கட்டமாக டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை கடந்த நிலையில், இன்று மாலைக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.020 அடியாகவும், நீர்வரத்து 41,722 கன அடியாக உள்ளது. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளது.
முழு கொள்ளளவு எப்போது?
இதன் காரணமாக மேட்டூர் 120 அடியை எட்டும்போது உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படும் என்பதால் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் நகராட்சி சார்பில் உபரிநீர் வெளியேற்றப்படும் பகுதியில் உள்ள தங்கமாபுரிபட்டணம், பெரியார் நகர், தூக்கனாம்பட்டி, மாதையன்குட்டை உள்ளிட்ட கிராமங்களில் காவிரிக் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பட்டச் சான்றிழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ளுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
நீர் திறப்பு:
இதனிடையே காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் மாலை முதல் 12000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது இந்த அளவு நேற்று காலை 10 மணி முதல் 16 ஆயிரம் கன அடி ஆகவும் நண்பகல் 12 மணி முதல் 20 ஆயிரம் கன அடி ஆகவும் அதிகரிக்கப்பட்டது. மாலை 6 மணி முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை:
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம். எனவே காவேரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தமிழக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.