Pet Dogs: வீட்டில் நாய் வளர்க்கிறீங்களா..? இனி லைசென்ஸ் கட்டாயம்...! வாங்குவது எப்படி..?
வளர்ப்பு நாய்களுக்கு லைசென்ஸ் பெற சேலம் மாநகராட்சியால் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தை ரூ.10 செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்.
![Pet Dogs: வீட்டில் நாய் வளர்க்கிறீங்களா..? இனி லைசென்ஸ் கட்டாயம்...! வாங்குவது எப்படி..? License is mandatory for dogs kept in households in Salem Corporation know hot to apply Pet Dogs: வீட்டில் நாய் வளர்க்கிறீங்களா..? இனி லைசென்ஸ் கட்டாயம்...! வாங்குவது எப்படி..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/02/637795e7a8c4fe19de1a3811f13f88411675306386237333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிராணிகள் இனப்பெருக்க கட்டுப்பாட்டு (நாய்) விதிகள் 2001 இல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார துறை சார்பில், தெருக்களில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் பிடிக்கப்படுகிறது.
இவற்றின் இனப்பெருக்க கட்டுபாட்டுக்காக அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது. அதோடு ரேபிஸ் தடுப்பூசியும் போடப்படுகிறது. பின்னர், பிடித்த இடத்திற்கே நாய்கள் கொண்டு சென்று விடப்படுகிறது. அதற்கு முன்பாக, தெருக்களில் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரியும் தெரு நாய்களை ஊழியர்கள் பிடித்து செல்லும் முறை இருந்தது.
அப்போது வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை பிடிக்காமல் இருப்பதற்கு அவற்றுக்கு லைசென்ஸ் வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது மாநகர பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை விகிதத்திற்கேற்ப வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், லைசென்ஸ் குறித்து மீண்டும் கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஒரு சில நேரங்களில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் முறையாக சுகாதாரமாக பராமரிக்கப்படாமலும், அவற்றிற்கு உணவளிக்காமலும் விட்டு விடுகின்றனர். அவற்றின் குட்டிகள் தெருவிலும் விடப்படுகிறது. தெரு நாய்களின் பெருக்கத்திற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. மேலும், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பு செய்ய இயலாமல் போகிறது. அவற்றுக்கு தடுப்பூசி போடப்பட்டு, சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதையும், கருத்தடை செய்யப்படுவதையும் கண்காணிக்க இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தப்படாமல் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களின் மூலமாக ரேபிஸ் நோய் பரவும் அபாயமும், நாய்களை வளர்ப்பவர்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதனால், வளர்ப்பு நாய்களுக்கு லைசென்ஸ் வழங்கி அவற்றை கண்காணிப்பதன் மூலம் ரேபிஸ் நோய், நுண்ணுயிரிகள் மூலமாகவும் ஒட்டுண்ணிகள் மூலமாகவும் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோய்களை கண்டறிய முடியும். இதற்கு சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் இந்நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும். எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மீண்டும் லைசென்ஸ் வழங்கும் நடைமறையை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளலாம் என சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் அறிக்கையை மாநகர் நல அலுவலருக்கும், மாநகராட்சி கமிஷனருக்கும் அளித்தனர்.
அதனை தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை) விதிகளின் படி, வளர்ப்பு நாய்களுக்கு சென்னை மாநகராட்சியில் லைசென்ஸ் வழங்கப்பட்டு வருவதை போன்று, சேலம் மாநகராட்சியிலும் ரூ.750 கட்டணம் செலுத்தி, நிபந்தனைகளுக்கு உட்பட்டு லைசென்ஸ் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், வளர்ப்பு நாய்களுக்கு லைசென்ஸ் பெற சேலம் மாநகராட்சியால் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தை ரூ.10 செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் லைசென்ஸ் கட்டணம் ரூ.750 செலுத்த வேண்டும். ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மார்ச் 31 வரை உள்ள ஒரு வருடம் லைசென்ஸ் செல்லுபடியாகும் காலம். லைசென்ஸ் பெறும் நடைமுறைகளை பின்பற்றி ரூ.50 கட்டணம் செலுத்தி லைசென்ஸ் ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்துடன் நாயின் இனம், பாலினம், வயது, அடையாளங்கள் போன்ற முழு விபரங்கள் அளிக்கப்பட வேண்டும். நாயின் அஞ்சல் அட்டை அளவிலான வண்ண புகைப்படம் இணைக்கப்பட வேண்டும். நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டதற்கும், குடற்புழு நீக்கம் செய்யப்பட்டதற்கும், நாய் ஆரோக்கியமாக உள்ளதற்கும் அரசு பதிவு பெற்ற கால்நடை மருத்துவரின் சான்று இணைக்கப்பட வேண்டும். சுகாதாரத் துறை மூலம் நாய்களுக்கு லைசென்ஸ் விரைவில் வழங்கப்படும். அதற்கான நடைமுறைகள் விரைவில் அமலுக்கு வருகிறது என்று கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)