மணல் கொள்ளையில் ரூ.15 ஆயிரம் கோடியை தமிழக அரசு கொள்ளையடித்திருக்கிறது - கே.பி.ராமலிங்கம்
தமிழ்நாட்டில் 80 சதவிகித தாய்மார்களும், இளைஞர்களும் மீண்டும் மோடி வர வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள் என பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகர் புதுரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் பெருங்குட்டம் பூர்ண சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டது. இதை அடுத்து கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்களா என அமலாக்கத்துறை விசாரிக்கக் கூடாது என நீதிமன்றம் செல்லக்கூடிய நிலையில் தான் தமிழக அரசு இருக்கிறது. மணல் கொள்ளையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு கொள்ளையடித்திருக்கிறது. அமைச்சர்களும் முதலமைச்சரும் கொள்ளையடித்து இருக்கின்றனர். யார் கொள்ளையடித்தாலும், ஊழல் செய்தாலும் அதை விசாரிக்கின்ற உரிமை மத்திய அரசின் அமலாக்க துறைக்கு உண்டு என்றார்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வேண்டுமா? வேண்டாமா என்பதே?. தமிழ்நாட்டில் 80 சதவிகித தாய்மார்களும், இளைஞர்களும் மீண்டும் மோடி வர வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள். அடுத்த முறையும் நிச்சயம் பாஜக ஆட்சி அமையும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் செந்தில் பாலாஜி அதிக அளவில் தவறு செய்திருக்கிறார். அவருக்கு தண்டனை கிடைக்க சில ஆண்டுகளாகும் ஆனால் குறைந்தபட்சமாவது சிறையில் வைத்திருக்க வேண்டும் என நீதிபதிகள் நினைத்திருக்கிறார்கள். செந்தில் பாலாஜி தவறு செய்திருக்கிறார் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஏற்கனவே பேசி இருக்கிறார். இந்த வழக்குக்கான ஆதாரங்கள், முகாந்திரம் அனைத்தும் கொடுத்தது முதலமைச்சர் தான். இதனாலே செந்தில் பாலாஜி தவறு செய்திருக்கிறார் என்றும், அதனால்தான் இன்னும் பெயில் கொடுக்காமல் இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.