குப்பைகளை அள்ளிக் குவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி!
கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். விரைவில் அதற்கான அரசாணை வர இருக்கின்றது.-செந்தில்பாலாஜி
கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் சிறப்பு தூய்மைப்பணிகளை துவக்கி வைக்கும் விதமாக திருக்காம்புலியூர் மந்தை, பிரம்மதீர்த்தம் சாலை மற்றும் வெங்கமேடு கொங்குநகர் ஆகிய பகுதிகளில் 'மாபெரும் தூய்மைப்பணி இயக்கத்தை' மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V. செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தார்.
மேற்சொன்ன அனைத்து பகுதிகளிலும் தூய்மைப்பணியாளர்களுடன் இணைந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியும், மாவட்ட ஆட்சித்தலைவரும் குப்பைகளை சுத்தம் செய்து தூய்மைப்பணியினை துவக்கிவைத்தார்கள். அப்போது, தூய்மைப்பணியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர், "பொதுமக்கள் அனைவரும் நலமுடன் வாழ உங்களின் அளப்பரிய, அர்ப்பணிப்பு மிக்க பணி மிகவும் இன்றியமையாதது. தன்னலம் கருதாது தினந்தோறும் குப்பைகளை சுத்தம் செய்யும் போற்றத்தகுந்த பணியினை மேற்கொண்டு வரும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்" என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
பின்னர் மின்சாரத்துறை அமைச்சர் V. செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில், கரூர் நகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் மாபெரும் தூய்மைப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த 48 வார்டுகளிலும் சுமார் 70,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அனைத்துக் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருக்கின்ற குப்பைகளை அகற்றி, தெருக்களை சுத்தம் செய்யும் வகையிலான சிறப்பு தூய்மை பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் தூய்மைப்பணியில் கரூர் நகராட்சியில் உள்ள 837 தூய்மைப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வார்டு வாரியாக மக்கள் தொகையின் அடிப்படையில் தூய்மைப்பணியாளர்கள் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கான மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அந்தந்த வார்டுகளிலேயே தூய்மைப்பணிகளை மேற்கொள்வார்கள். அந்ததந்தப் பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைக்களையும் கேட்டு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படும். குப்பைகளை அகற்றுவதற்காக 8 லாரிகள், 18 டாடா ஏஸ் வாகனங்கள் மற்றும் பேட்டரியால் இயங்கக்கூடிய 105 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விரைவில் குப்பைகளை அகற்றி அப்புறப்படுத்துவதற்கு ஏதுவாக இந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். விரைவில் அதற்கான அரசாணை வர இருக்கின்றது. தற்போது கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளையும் தூய்மையாக, சுகாதாரமாக வைத்திருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். மக்கள் விரும்புகின்ற வகையில் இந்த மாபொரும் தூய்மைப்பணி இயக்கம் அமையும். இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கரூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கண்ணன், கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் சந்தோஷ்குமார், கரூர் நகர் நல அலுவலர் லட்சியவர்ணா, நகராட்சிப் பொறியாளர் நக்கீரன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.