அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வருகிறதா சிதம்பரம் நடராஜர் கோயில்? - திருமா சூசகம்
'அமைச்சர் சேகர்பாபு மிகச் சிறப்பாக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறார் எனவே இது எல்லா கோயில்களுக்கும் பொருந்தும் சிதம்பரத்திற்கும் பொருந்தும்'
சேலத்தில் நேற்று இரவு நடந்த பிரம்மாண்ட சமூகநீதி நாள் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டு சீறப்புறையாற்றிய நிலையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்,
நீட் தேர்வு தமிழக மாணவர்களை பழிவாங்கி கொண்டிருக்கிறது. எனவே நீட் தேர்வு மற்றும் வேளாண் சட்டத்திற்கு எதிரான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 20 ஆம் தேதி அவரவர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நடைபெற கூடிய இந்த போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது அது தற்போது மாற்றப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், சிதம்பரம் நடராசர் கோயில் இந்து அறநிலையத்துறை கீழ் கொண்டு வருவதை கோரிக்கை வைக்காமலேயே திமுக அரசு நடவடிக்கை எடுக்கும். அமைச்சர் சேகர்பாபு மிகச் சிறப்பாக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறார் எனவே இது எல்லா கோயில்களுக்கும் பொருந்தும் சிதம்பரத்திற்கும் பொருந்தும் என்று கூறினார்.
தமிழக ஆளுநருராக பொறுப்பேற்றுள்ள ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. நாகலாந்து மாநிலத்தில் அவருக்கு எதிராக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே தான் அவரது நியமனத்தை திரும்பபெற வேண்டும் என்று விசிக கோரிக்கை விடுத்தோம். ஆளுநர் பதவியேற்பு விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது, ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் பங்கேற்கவில்லை என்றார்.
அதிமுக ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல் தலைவிரித்து ஆடியது. இன்றைக்கு அது வெளிச்சத்துக்கு வருகிறது. இதை அதிமுகவே அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. எதிர்ப்பே, விமர்சனமே அவர்களிடம் இருந்து வரவில்லை. கடமையை செய்யும் ஊடகவியலாளர்களை தாக்குவது கண்டத்திற்குரியது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் திமுக உடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறிய அவர்,தமிழகத்தில் திமுகவின் ஆட்சி சிறப்பாக உள்ளது. திமுக அரசு என்பதைவிட சமூக நீதி அரசு என்பதே பொருத்தமானது என்று கூறினார்.