சிறைச்சாலையில் 3 மாதத்தில் இரண்டு டன் காய்கறிகள் சாகுபடி - சேலம் திறந்த வெளி சிறையின் புதிய முயற்சி
தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி பூசணி போன்ற பல்வேறு வகையான காய்கறிகளும், கீரை வகைகள், வாழைப்பழம் மற்றும் இளநீர் இங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
சேலம் திறந்த வெளி சிறைச்சாலையில் கடந்த மூன்று மாதத்தில் இரண்டு டன் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் திறந்த வெளி சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த சிறைச்சாலையில் நன்னடத்தை அடிப்படையில் 10 சிறை வாசிகள் உள்ளனர். மொத்தம் 10.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த சிறைச் சாலையில் தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி பூசணி போன்ற பல்வேறு வகையான காய்கறிகளும், கீரை வகைகள், வாழைப்பழம் மற்றும் இளநீர் இங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இதேபோல் 15 கால்நடைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திறந்தவெளி சிறை சாலை கரடு முரடான நிலப்பரப்பாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நிலப்பரப்பு சமன் செய்யப்பட்டு விளை நிலமாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திறந்த வெளி சிறைச்சாலையின் செயல்பாடுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சேலம் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் கூறுகையில், இங்கு சிறைவாசிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட வேளாண் சாகுபடி வாயிலாக கடந்த மூன்று மாதங்களில் இரண்டு டன் காய்கறிகள் விளைவிக்கப்பட்டுள்ளன என்றும், இங்கு விளைவிக்கப்பட்ட புடலங்காய், கத்திரிக்காய், முள்ளங்கி, பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் அனைத்தும் சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் இங்கு வளர்க்கப்படும் பசு மாடுகளின் மூலம் இங்கிருந்து நாள்தோறும் சுமார் 15 லிட்டர் பால் உள்பட மாதத்திற்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான காய்கறிகள் சிறைச்சாலைக்கு அனுப்புவதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் மஞ்சள் மற்றும் கூடுதல் காய்கறிகளைக் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை நடவு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் ரசாயன கலப்பு இல்லாத இயற்கை உரங்களை பயன்படுத்தி மட்டுமே சாகுபடி செய்யப்படுவதால் விளை பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் சுவையானதாகவும் இருக்கும் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் நன்னடத்தை அடிப்படையில் இதுபோன்று விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுவதும், அதைக் கொண்டு சிறைச்சாலையில் உள்ள சிறைவாசிகளுக்கு இயற்கையான முறையில் உணவு அளிக்கப்படுவது மிகுந்த ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். சேலம் மத்திய சிறையில் இந்த நடவடிக்கையை தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் செய்தால் சிறை வாசிகளுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு கொடுப்பதோடு சிறை வாசிகளுக்கு இயற்கையான உணவு பொருட்கள் உணவில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை பட வேண்டும் என கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்