(Source: Poll of Polls)
Vaigaiselvan: ராமநாதபுரத்தில் பலாப்பழம் வியாபாரம் ஆகாததால் அதிமுகவிற்கு வர பார்க்கிறார் - வைகைச்செல்வன் விமர்சனம்
மின் கட்டண உயர்வு சுமையை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் மீது திணிக்க கூடாது. ஆனால் திமுக அரசு மக்கள் மீதுதான் திணிக்கிறது என்றும் கூறினார்.
தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும், நியாய விலை கடைகளில் பாமாயில் மற்றும் பருப்பு போன்ற உணவுப் பொருட்களை வழங்காமல் மக்களை வஞ்சித்து வரும் விடியா திமுக அரசை கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுக இலக்கிய அணி செயலாளருமான வைகைச்செல்வன் கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியது:
"இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் வீட்டு வாடகையைவிட மின் கட்டணம் அதிகமாக உள்ளது. திமுக ஆட்சியில் தான் இறந்து போனவர்களும் வாக்களிக்க வாக்கு சாவடிகளுக்கு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட 100 யூனிட் இலவச மின்சாரத்தால் ஒரு கோடி பேர் பயன் பெற்றனர். தற்போது தனியாரிடம் நிலுவையில் உள்ள 20 ஆயிரம் கோடி ரூபாய் மின் கட்டணத்தை வசூலிக்க திமுக ஆட்சியாளர்களால் முடியவில்லை. மின் கட்டணம் உயர்வால் வணிகர்கள் தொழிலை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பீக் ஹவர் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மூன்று மாத காலமாக நியாய விலை கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்காமல் ஏழை எளிய மக்களை திமுக அரசு நசுக்கி வருகிறது. தரமற்ற அரிசியை தான் வழங்குகின்றனர். ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் செல்வாக்கு இழக்காத ஒரே இயக்கம் அதிமுக. ராமநாதபுரத்தில் பலாப்பழம் வியாபாரம் ஆகாததால் அதிமுகவிற்கு வர பார்க்கிறார்" என்று ஓபிஎஸ் குறித்து வைகைச் செல்வன் பேசினார்.
இதைத்தொடர்ந்து வைகைச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொழிலையும் மின் கட்டணம் உயர்வு மூலம் தமிழக அரசு நசுக்குகிறது. சிறு, குறு தொழிற்சாலைகளை மூடக்கூடிய அவலத்தை ஏற்படுத்துகிறது என்றார். நியாய விலை கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்குவதில்லை. உடனடியாக இந்த உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். ஆனால் நியாய விலை கடைகளுக்கு மூடு விழா நடத்தி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு சுமையை அரசே ஏற்றுக் கொண்டது.
தற்போது தனியாரிடமிருந்து வசூல் செய்ய வேண்டிய 20 ஆயிரம் கோடி தொகைக்கு திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது. ஒவ்வொரு மாதமும் தனியாரிடமிருந்து 5,400 கோடி ரூபாய் அளவுக்கு மின்சாரம் விலைக்கு வாங்கப்படுகிறது. ஆண்டிற்கு கணக்கிட்டால் 64 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு மானியம் வழங்கி ஊக்கப்படுத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்றார். ஆண்டிற்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். அப்படி இருந்தால் தான் மத்திய அரசு நிதியை பெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. இருந்தாலும் மின் கட்டண உயர்வு சுமையை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் மீது திணிக்க கூடாது. ஆனால் திமுக அரசு மக்கள் மீதுதான் திணிக்கிறது. பீக் அவர்ஸ் டேரிப் என்ற பேரில் கந்துவட்டிக்காரர் போல் வசூல் செய்யும் நிலையை தான் இந்த அரசு ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவை பொருத்தவரை யாரையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற அடிப்படையில் நீக்கப்படவில்லை. பொது குழுவில் எடுத்த முடிவின் அடிப்படையில் தான் நீக்கப்பட்டுள்ளார்கள். வெளியே சென்றவர்களுக்கு வாய்ப்பில்லை என்பதை பொதுச் செயலாளர் தெள்ளத் தெளிவாக ஏற்கனவே கூறிவிட்டார்" என்று தெரிவித்தார்.