ABP Nadu Exclusive: விவசாயம் செய்து தண்டனை காலத்தை குறைக்கும் சிறைவாசிகள்... எப்படின்னு தெரிஞ்சிக்க இத படிங்க
சேலம் திறந்தவெளி சிறையில் இயற்கையான முறையில் விவசாயம் செய்து தங்களது தண்டனை காலத்தை சிறைவாசிகள் குறைத்து வருகின்றனர்.

சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இந்த நிலையில் சிறைவாசிகள் தங்களது தண்டனை காலம் முடிந்து திரும்பும் போது அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திறந்தவெளி சிறைச்சாலை:
இதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சேலம் மத்திய சிறைக்கு சொந்தமான திறந்தவெளி சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த சிறைச்சாலையில் நன்னடத்தை அடிப்படையில் 10 சிறை வாசிகள் வரை தங்க வைக்கப்படுகின்றனர். மொத்தம் 10.65 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த திறந்தவெளி சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச் சாலையில் தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி, பூசணி போன்ற பல்வேறு வகையான காய்கறிகளும், முளைக்கீரை, பாலக்கீரை என நான்கு கீரை வகைகள், வாழைப்பழம் மற்றும் இளநீர் இங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் 15 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி 10 லிட்டர் வரை பால் சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு வழங்கப்படுகிறது.
திறந்தவெளி சிறை என்றால் என்ன?
சேலம் மத்திய சிறை தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான சிறைகளில் ஒன்றாகும். இங்கு வரும் சிறைவாசிகள் நன்னடத்தை அடிப்படையில் தேர்ந்தெடுத்து திறந்தவெளி சிறையில் அடைக்கப்படுவர். குறிப்பாக மத்திய சிறையில் உள்ள கட்டுப்பாடுகள் திறந்தவெளி சிறையில் இருக்காது. நன்னடத்தை சிறைவாசிகள் சுதந்திரமாக திறந்தவெளி சிறைச்சாலையில் இருக்க முடியும். கடந்த 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திறந்தவெளி சிறைச்சாலை கரடு முரடான நிலப்பரப்பாக இருந்துள்ளது. அதனை சீர்படுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிலப்பரப்பு சமன் செய்யப்பட்டு விளை நிலமாக மாற்றப்பட்டு நன்னடத்தை சிறைவாசிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்கு சிறைவாசிகள் மூலம் விளைவிக்கப்பட்ட வேளாண் பொருட்களான தக்காளி, புடலங்காய், கத்திரிக்காய், முள்ளங்கி, பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் அனைத்தும் சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நிலத்தில் ரசாயன கலப்பு இல்லாத இயற்கை உரங்களை பயன்படுத்தி மட்டுமே சாகுபடி செய்யப்படுவதால் விளை பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் சுவையானதாகவும் இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாய மூலம் தண்டனை குறைவது எப்படி?
மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் அலுவலகப் பணிகளை தவிர்த்து பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன் மூலம் ஒரு மாதத்தில் 85% வருகை இருந்தால் அவர்களுக்கு தண்டனை காலத்தில் நான்கு நாட்கள் குறைக்கப்படுகிறது. இதேபோல் திறந்தவெளி சிறையில் உள்ள சிறைவாசிகள் விவசாயத்தில் ஈடுபடுவதால் அவர்களுக்கு தண்டனை காலத்தில் 50% வரை தண்டனை குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சேலம் மத்திய சிறையின் சிறை கண்காணிப்பாளர் வினோத் கூறுகையில், சேலம் திறந்தவெளி சிறைச்சாலையில் தற்போது ஏழு நன்னடத்தை சிறைவாசிகள் உள்ளனர். இங்கு உள்ள சிறைவாசிகள் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக, 21 வயது முதல் 55 வயது உள்ள நன்னடத்தை சிறைவாசிகள் திறந்தவெளி சிறையில் அடைக்கப்படுவார்கள். போக்சோ, கொலை, ஆயுள் தண்டனை உட்பட முக்கிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு திறந்தவெளி சிறைச்சாலையில் அனுமதி இல்லை. சேலம் திறந்தவெளி சிறையில் தேக்கு மரம், நெல்லி மரம், சப்போட்டா மரம், தென்னை மரம் என பலவகை மரங்கள் உள்ளது. இங்குள்ள சிறைவாசிகள் தக்காளி, கத்திரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், அவரை, பீர்க்கங்காய், சுரக்காய் உள்ளிட்ட 15 வகையான காய்கறிகளை இயற்கையை விவசாயம் செய்கின்றனர். இது மட்டுமின்றி, பாலக்கீரை, முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை என நான்கு வகையான கீரைகளையும் இயற்கையான முறையில் சாகுபடி செய்து வருகின்றனர். திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தினம் தோறும் சேலம் மத்திய சிறைக்கு 10 லிட்டர் பசும்பால் அனுப்பப்படுகிறது. கடந்த பொங்கல் பண்டிகைக்காக சேலம் திறந்தவெளி சிறைச்சாலையில் 4 ஏக்கரில் 10 ஆயிரம் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டது. இந்தக் கரும்புகள் சேலம் மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் உள்ள 14 சிறைகளில் உள்ள 1700 கைதிகளுக்கு தலா ஒரு கரும்பு வழங்கப்பட்டது. மீதமுள்ள கரும்புகள் பொது மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு அதன்மூலம் கிடைத்த பணத்தை திறந்தவெளி சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு பிரித்து சிறைவாசிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் நன்னடத்தை அடிப்படையில் இதுபோன்று விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுவதும், அதைக் கொண்டு சிறைச்சாலையில் உள்ள சிறைவாசிகளுக்கு இயற்கையான முறையில் உணவு அளிக்கப்படுவது மிகுந்த ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது. திறந்தவெளி சிறைச்சாலையில் விவசாயம் செய்வதன் மூலம் சிறைவாசிகளும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார்கள். சேலம் திறந்தவெளி சிறைச்சாலையில் 25 கைதிகள் தங்க வைத்து விவசாயம் செய்வதற்கு அனுமதி கேட்டுள்ளதாகவும், அதன் மீது தமிழ்நாடு சிறைத்துறை பரிசீலித்து வருவதாகவும் கூறினார்.

