“ எனக்காக முதல்வர் பேசவில்லை; மௌனம் காப்பது ஏன்?” - திமுகவை அலறவிடும் குஷ்பு !
“முதல்வரிடம் நான் கேட்க விரும்புவது எனது கட்சியைச் சேர்ந்த யாராவது இப்படிப் பேசியிருந்தால், என் முதல்வர் இன்னும் அமைதியாக இருப்பாரா? எனக்கு நடந்த இந்த அவலத்தை குறித்து ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?"
"எனது முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக்கு ஆதரவாக நிற்பதை பார்க்க விரும்புகிறேன், அவர் ஏன் அமைதியாக இருக்கிறார்?", என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
குஷ்பு அவமதிப்பு
தம்மை தவறாக பேசியவர் மீது புகாரளிக்க உள்ளதாக பாஜக-வின் குஷ்பு தெரிவித்துள்ளார். "நீதிக்காக நான் எங்கு செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் செல்வேன். புகார் அளித்து என் கண்ணியம் மற்றும் மரியாதைக்காக போராடுவேன்" என்று கூறியுள்ளார். மகாராஷ்டிர பாஜக தலைவர் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) எம்பி சுப்ரியா சுலேவை "அரசியலை விட்டுவிட்டு சமையலறையில் போய் வேலை செய்யுங்கள்" என்று பாஜக தலைவர்கள் சிலர் கூறியது குறித்து கருத்து கேட்டபோது, "நான் இந்த விஷயத்தில் சுப்ரியாவுக்கு ஆதரவாக நிற்கிறேன். ஆனால் பெண் வெறுப்பு கருத்துக்கும், பொது மேடையில் திமுக பேச்சாளர் ஒருவர் கூறிய அவதூறான கருத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. திமுகவை சேர்ந்தவர் என்னை தவறாக சித்தரித்தார்" என்று அவர் கூறினார்.
“எனது முதலமைச்சரிடம் நான் கேட்க விரும்புவது எனது கட்சியைச் சேர்ந்த யாராவது இப்படிப் பேசியிருந்தால், என் முதல்வர் இன்னும் அமைதியாக இருப்பாரா? எனக்கு நடந்த இந்த அவலத்தை குறித்து ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? 22 மற்றும் 19 வயதுடைய என் மகள்கள் என்னிடம் கேள்வி கேட்பார்கள். நான் என் மகள்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்", என்று கூறியிருந்தார்.
மன்னிப்பு கேட்ட கனிமொழி
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம் , கௌதமி ஆகியோர் குறித்து திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 'பாஜகவில் கட்சி வளர்க்கும் நான்கு நடிகைகள்' என்று பெயர்களைக் குறிப்பிட்டு பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதாக ஒரு காணொளி சமுக வலைதளங்களில் பரவியது. இது குறித்த குஷ்புவின் பதிவில் கனிமொழி வந்து பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் பேச்சுவார்த்தை
பெண்கள் குறித்து திமுக பேச்சாளர் சைதை சித்திக் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, வியாழன் அன்று கனிமொழியை டேக் செய்து ட்வீட் செய்த குஷ்பு, “ஆண்கள் பெண்களை அவமரியாதை செய்யும்போது, அவர்கள் எந்த மாதிரியாக வளர்க்கப்பட்டுள்ளனர் என்ற நச்சு சூழலை காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அத்தகைய ஆண்கள் தங்களை, கலைஞரை பின்பற்றுபவர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். இதுதான் முதல்வர் ஸ்டாலினின் புதிய திராவிட மாடலா?", என்று கேட்டு கனிமொழியை டேக் செய்திருந்தார். "ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் அவர் கூறியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதை யார் செய்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் பொறுத்துக் கொள்ள முடியாது. இதற்கு நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க முடியும், ஏனென்றால் தலைவர், @mkstalin மற்றும் எனது கட்சியும் @arivalayam இதனை மன்னிக்காது, ”என்று கனிமொழி தனது ட்வீட்டில் நடிகை குஷ்புவை டேக் செய்து, பதிலளித்தார்.