Mamata meet Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் என் அரசியல் ரீதியிலான நண்பர்: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இன்று மாலை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று மாலை சந்தித்து பேசவுள்ளார்.
இச்சந்திப்பில், பாஜகவுக்கு எதிராக பல மாநிலங்களில் உள்ள கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை வருகை:
இதற்காக தமிழ்நாட்டிற்கு கிளம்புவதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னுடைய அரசியல் ரீதியான நண்பர். இன்று அவரை சந்திக்கப்போகிறேன். இரண்டு அரசியல்வாதிகள் சந்திக்கும்போது அரசியல் தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், நாளை நடைபெறவுள்ள மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசன் இல்ல விழாவில் பங்கேற்கவுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்:
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடாது என திமுக திட்டவட்டமாக உள்ளது. அதே நிலைப்பாடில்தான் திரிணாமுல் கட்சியை சேர்ந்த மம்தாவின் நிலைப்பாடும் உள்ளது.
இந்நிலையில் இன்று இருவருக்கிடையேயான சந்திப்பு, நிச்சயமாக வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தான பேச்சு இருக்கும் எனவும் அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் கூட்டணி:
காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான கூட்டணி வலுவாக உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் இடையேயான கூட்டணி, சற்று இழுபறியாகவே உள்ளது. இதை, குடியரசுத் தலைவர் வேட்பாளரை, எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தும் போதும் பார்க்க முடிந்தது.
மேலும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தனியாக தேசிய கட்சி தொடங்கி தனிப்பதையில் பயணிக்கிறார்.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் ஒன்றிணையுமா என்பது கேள்வுக்குறியாகவே உள்ளது.