(Source: ECI/ABP News/ABP Majha)
ABP Exclusive | ‛விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளாரா? எனக்கு எதுவும் தெரியாதே...’ திமுகவிற்கு ஆதரவளித்த தூத்துக்குடி மன்ற தலைவர் பேட்டி!
Vijay Makkal Iyakkam : ஒருவேளை தன்னிச்சையாக பில்லா ஜெகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தால், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க விஜய் முன்வராதது, மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் கண்ட நடிகரின் விஜய்யின் , விஜய் மக்கள் இயக்கம், ஊராட்சி வார்டுகள் சிலவற்றை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் மன்றத்தினர் போட்டியிட, நடிகர் விஜய் அனுமதி அளித்தார். அதுமட்டுமின்றி, தனது கட்சிக் கொடி மற்றும் தனது பெயரை பயன்படுத்த அவர் அனுமதித்தார்.
பல இடங்களில் விஜய் மக்கள் மன்றத்தினர் வேட்புமனுத்தாக்கல் செய்து களத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 5 ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடைபெறும் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விஜய் மக்கள் இயக்கம் ஆதரிக்கும் என அந்த அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென்மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் அறிவித்தார்.
"எந்த கட்சியுடனும், கூட்டணியோ ஆதரவோ இல்லாமல்” - விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்ட அறிக்கை..#VijayMakkalIyakkamhttps://t.co/A50j4JIFib
— ABP Nadu (@abpnadu) February 8, 2022
அதுமட்டுமின்றி, அவர் அன்று அளித்த செய்தியாளர்களுக்கான பேட்டியில், ‛உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தினருடன் நடைபெற்ற ஆலோசனையில், திமுக கூட்டணிக்கு ஆதரவு வழங்க அனைவரும் முடிவு செய்ததாகவும், அதற்கான விருப்பத்தை தலைமைக்கு தெரிவித்து, அவர்களின் ஒப்புதல் பேரில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக,’ அறிவித்தார்.
இந்நிலையில் தான், மூன்று நாட்கள் கழித்து இன்று விஜய் தரப்பில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், ‛எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமலும், ஆதரவு இல்லாமலும் தான் விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதாக’ அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி விஜய் மக்கள் இயக்கத்தின் அறிவிப்பு தான், இந்த திடீர் அறிவிப்புக்கு காரணம். இந்நிலையில், எதன் அடிப்படையில், திமுக உடன் கூட்டணி வைத்தீர்கள் என்றும் அறிய, தூத்துக்குடி விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லா ஜெகனை தொடர்பு கொண்டோம். போனை எடுத்த அவர், ‛விஜய் மக்கள் இயக்கம் அறிவித்த அறிவிப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், அறிவித்துள்ளார்களா... என்றும், தெரியாதது போல கேட்ட அவர், அறிவிப்பு பற்றி தெரிந்துவிட்டு பேசுகிறேன்,’ என்று போனை கட் செய்தார்.
திமுக உடன் தானாக முன்வந்து பில்லா ஜெகன் கூட்டணி அறிவிப்பு வெளியிட்டாரா... அல்லது அவர் முன்பு கூறியது போல, தலைமை முடிவின் படி அறிவிப்பு வெளியிட்டாரா என்கிற சந்தேகம் தற்போது வலுப்பெற்றுள்ளது. அல்லது, ஆதரவு தெரிவிக்க கூறிவிட்டு, விஜய் பின் வாங்கிவிட்டாரா என்கிற சந்தேகமும் வராமல் இல்லை. ஒருவேளை தன்னிச்சையாக பில்லா ஜெகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தால், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க விஜய் முன்வராதது, மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கூட்டணி இல்லை என்கிற விஜய்யின் அறிவிப்பை கடைகோடியில் இருப்பவரும் அறிந்து கொண்டிருக்கும் வேளையில், அதற்கு காரணமானவர், கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு மேலாகியும் தெரியாமல் இருப்பதாக கூறுவதும் சந்தேகத்தை எழுப்புகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்