Watch Video: ‛பேசுங்க... வாசிக்காதீங்க சார்...’ வைகோவை கொதிக்க வைத்த வெங்கையா நாயுடு... ஆக்ரோஷ வீடியோ!
‛‛பேசாமல் குறிப்புகளை வாசிப்பதால், அது கட்டாயம் சபைக்குறிப்பில் ஏறாது. இதையும் உங்கள் வசதிக்காக, ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறேன்...’’ -வெங்கையா
இந்திய நாடாளுமன்றம் முடங்கியது, ஒத்திவைத்தது என்கிற செய்தியை தான் கடந்த சில நாட்களாக நாம் படித்தும், பார்த்தும் வருகிறோம். அதையும் மீறி சில மணி நேரம் நடக்கும் நாடாளு மன்றத்தின் நிகழ்வுகளில், சில சுவாரஸ்யங்களும், சில கறார் வாக்குவாதங்களும், கண்டிப்புகளும் கூட நடந்து விடுகிறது. இதுவும் அந்த ரகத்தைச் சேர்ந்த செய்தி தான். நாடாளுமன்றத்தில் கர்ஜித்தவர் என்ற பெயர் பெற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்துள்ளார். அதுவும் பேசவில்லை.... என்கிற காரணத்திற்காக! வைகோவால் பேச முடியவில்லையா...? நடந்தது என்ன?
மாநிலங்களவை எனப்படும் ராஜ்யசபாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று உரையாற்றினார். அப்போது, தென் மாநில எம்.பி.,களுக்கு வரும் கடிதங்கள் அனைத்தும் இந்தியில் இருப்பதாகவும், இந்தி மொழி பேசாத மாநிலங்கள் மீதான மத்திய அரசின் ஆதிக்க போக்கை இது காட்டுவதாகவும் கண்டித்த வைகோ, மத்திய அரசின் திட்டங்கள், கொள்ளைகள் உள்ளிட்ட இதர பிற அனைத்தும் இந்தியில் இருப்பதால் எங்களுக்கு எதுவுமே புரியவில்லை என்று பேசிய வைகோ, கோடிக்கணக்கில் மத்திய அரசு பணம் செலவழித்தும், அதன் பயன் என்ன என்பதை எங்களால் அறிய முடியவில்லை என்றார்.
ஆங்கிலத்தை பின்தள்ளும் போக்கை ஏற்க முடியாது என்றும், அனைத்து மாநில மொழிகளையும் மத்திய அரசின் நிர்வாக நடைமுறைகளில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள் இருந்து வருவதாகவும், அதை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ராஜ்யசபாவில் வைகோ பேசினார்.
வைகோ பேசும் போது, கையில் வைத்திருந்த குறிப்புகளை பார்த்து பேசிக் கொண்டிருந்ததை கவனித்த மாநிலங்களை தலைவரும், துணை குடியரசு தலைவருமான வெங்கையா நாயுடு, வைகோவை இடைமறித்தார். அப்போது பேசிய வெங்கையா நாயுடு, ‛நீங்கள் சொல்ல வந்ததை சொல்லிவிட்டீர்கள். அது புரிந்து கொள்ளும் அளவிற்கு போதுமானது. நீங்கள் பேசுவதற்கு பதிலாக வாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்... நாடாளுமன்ற விதிகளின் படி இது பொருந்தாத விசயம். பேசாமல் குறிப்புகளை வாசிப்பதால், அது கட்டாயம் சபைக்குறிப்பில் ஏறாது. இதையும் உங்கள் வசதிக்காக, ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறேன்.
இதனால் கோபமடைந்த வைகோ, குறிப்புகள் இல்லாமல் பேசத் தொடங்கினார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் வைகோ தொடர்ந்து பேச முற்பட்டார். அப்போது மீண்டும் குறிக்கிட்ட வெங்கையாநாயுடு, ‛இந்திய மொழிகளில் எதையும் திணிக்கவும் கூடாது... ஒடுக்கவும் கூடாது... ஒவ்வொரு மொழியையும் ஊக்குவிக்க வேண்டும்..’ என கூறிவிட்டு, அடுத்த எம்.பி., பேசுமாறு அழைப்பு விடுத்தார்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த வைகோ, என்னை பேச அனுமதிக்க வேண்டும் என்றும் என் வாய்ப்பை தடுக்க வேண்டாம் என்றும் கடுமையாக வாதிட்டார். அதற்கு பதிலளித்த வெங்கையா நாயுடு, ‛நீங்கள் ஒரு மூத்த எம்.பி., சபைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...’ என கூறி, வைகோவுக்கு வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டார். இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தால் ராஜ்யசபாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வைகோ பேசிய வீடியோ லிங் கீழே: சரியாக 15:16 நிமிடத்தில் அவரது பேச்சு வருகிறது..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்