TTV Dinakaran : இதுதான் சொல்லாததையும் செய்வதா..? மின்கட்டண உயர்வுக்கு தினகரன் கடும் கண்டனம்..!
தமிழ்நாட்டு மக்களை எந்த அளவுக்கு துன்புறுத்த முடியுமோ அந்தளவுக்கு அடுத்தடுத்து தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
![TTV Dinakaran : இதுதான் சொல்லாததையும் செய்வதா..? மின்கட்டண உயர்வுக்கு தினகரன் கடும் கண்டனம்..! TTV Dhinakaran condemns electricity tarriff hike TTV Dinakaran : இதுதான் சொல்லாததையும் செய்வதா..? மின்கட்டண உயர்வுக்கு தினகரன் கடும் கண்டனம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/23/2eb1cd85d17d78a389d5b2297cb6db5a1663922182127224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் கடந்த செப்டெம்பர் 10ஆம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. முன்னதாக ஜூலை மாதம் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து 2 வாரங்களுக்கு முன் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததை அடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் தொழில் அமைப்புகளும் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுதான் சொல்லாததையும் செய்வதா?
அதன்படி, முன்னதாக மின் கட்டண உயர்வுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
”மின் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்திய தி.மு.க அரசு எந்தவித அறிவிப்புமின்றி புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தையும் இஷ்டம்போல் உயர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. தமிழ்நாட்டு மக்களை எந்த அளவுக்கு துன்புறுத்த முடியுமோ, அந்தளவுக்கு அடுத்தடுத்து தி.மு.க. அரசு செயல்பட்டு வருவதற்கு இது இன்னொரு சான்று.
மக்களை நேரடியாக பாதிக்கும் இந்தக் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது. இதுதான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் 'சொல்லாததையும் செய்வதோ?!” எனத் தெரிவித்துள்ளார்.
மின்கட்டணத்தைக் கடுமையாக உயர்த்திய தி.மு.க அரசு, எந்தவித அறிவிப்பும் இன்றி புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தையும் இஷ்டம்போல் உயர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. (1/2) @CMOTamilnadu @mkstalin
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 23, 2022
தமிழ்நாட்டு மக்களை எந்த அளவிற்கு துன்புறுத்த முடியுமோ அந்தளவிற்கு அடுத்தடுத்து தி.மு.க அரசு செயல்பட்டு வருவதற்கு இது இன்னொரு சான்று.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 23, 2022
மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது.
இதுதான் திரு.ஸ்டாலின் அடிக்கடி கூறும் 'சொல்லாததையும் செய்வதோ?!' (2/2)
தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக கடந்த ஜூலை மாதம் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
நுகர்வோர் 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று நுகர்வோரே எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்புத் திட்டம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.
200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 27.50 ரூபாய் மின் கட்டணம் உயர்வதாகவும், 301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 2 மாதங்களுக்கு 147.50 ரூபாய் கட்டணம் உயர்த்த பரிசீலிக்கப்படுவதாகவும், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 298.50 கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 42 விழுக்காடு வீடு மற்றும் குடிசைகளுக்கான மொத்தக் கட்டணத்தில் மாற்றமில்லை என்றும் விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது தொடரும் என்றும் தெரிவித்திருந்தார்.
ரயில்வே மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு 65 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு அழுத்தம்
கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத் துறையில் 12,647 கோடி கடன் உயர்ந்துள்ள நிலையில், மூன்றில் இரு பங்கு தனியாரிடம் நிலக்கரி வாங்க வேண்டி உள்ளதாகவும், வெளிநாட்டு நிலக்கரியின் கட்டண உயர்வால் மின்சாரத் துறையில் கடன் அதிகரித்துள்ளதாகவும், மின் கட்டணத்தை உயர்த்த ஒன்றிய அரசு மூலம் 18 முறை அழுத்தம் வந்ததாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது என்றும், மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்கும் நிலைக்கு தமிழ்நாடு மின் வாரியம் தள்ளப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)