நீலகிரி செல்வதற்காக நாளை கோவைக்கு வரும் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட தபெதிக முடிவு
கோவைக்கு வருகை தரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்வதற்காக நாளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். பின்னர் அங்கிருந்து ஊட்டிக்கு செல்ல உள்ளார். இந்நிலையில் கோவைக்கு வருகை தரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று காந்திபுரம் பெரியார் படிப்பக்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், ”தமிழக மக்கள் நலனுக்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 19 மசோதாக்களுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்காமல் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறார்.
தமிழக அரசின் மசோதாக்களை ஒன்றிய அரசிற்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார். அதே போல் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கொண்டு வந்த நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவிற்கும் பதில் இல்லை. தொடர்ந்து மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் ஆளுநர் செயல்படுகிறார். தமிழக ஆளுநர் மாளிகை சனாதான கூடமாக மாற்றியுள்ளார். அண்மையில் ஆளுநர் மாநில உரிமையை பறிக்கும் வகையிலும், மாநிலங்கள் வலிமை பெற கூடாது என ஒடுக்கும் கருத்துகளை கூறி வருகிறார். பல்கலைகழகங்களை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தமிழக அரசு தலையிட முடியாத அளவிற்கு நடத்தி வருகிறார். தமிழக மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவிடாமல் ஆளுநர் மூலம் ஒன்றிய அரசு தடுத்து வருகிறது.
இவற்றை கண்டிக்கும் விதமாக ஊட்டி செல்வதற்காக நாளை ஆளுநர் ஆர்.என். ரவி கோவை விமான நிலையம் வரும் போது, தமிழக மக்களின் உணர்வுகளை காட்டும் வகையில் விமான நிலையம் அருகே அனைத்து முற்போக்கு இயக்கம் சார்பில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளோம்” என அவர் தெரிவித்தார். ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டிய விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளது குறித்த கேள்விக்கு, ”சென்னா ரெட்டி ஆளுநராக இருந்த போது அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து முட்டை, தக்காளியை கொண்டு தாக்குதல் நடத்தினர். ஆனால் இப்போது மாநில நலனுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டினால் அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதை, அதிமுக ஒப்புக்கொள்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது” என அவர் பதிலளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்