TN Ministers Delhi Visit : “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
நேற்றே தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம், தென்னரசு மற்றும் திமுக எம்.பிக்கள் என ஒரு படையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஏன் சந்திக்க வேண்டும்? என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன
தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் பல மாவட்டங்களை புரட்டிப் போட்டிருக்கும் நிலையில் முக்கியத் துறைகளின் அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அடுத்தடுத்து நிர்மலா சீதாரமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்
திமுகவின் முதன்மைச் செயலாளரும் முக்கியமான நகராட்சி நிர்வாகத் துறையின் அமைச்சருமாக இருக்கும் கே.என்.நேரு, நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். அப்போது அவர், ஜல்ஜீவன் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை நிர்மலா சீதாராமனிடம் அளித்துள்ளார்.
அதே மாதிரி தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நிர்மலா சீதாரமனை சந்தித்த புகைப்படத்தையும் பகிர்ந்து ‘மரியாதை நிமித்தமாக’ சந்தித்தேன் என குறிப்பிட்டுள்ளார் தங்கம் தென்னரசு.
இவர்கள் மட்டுமின்றி நேற்று ஒரே நாளில், திமுக எம்.பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, அருண் நேரு உள்ளிட்ட பலரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுவை அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் புயல் அடிக்கும்போது அமைச்சர்கள் டெல்லி சென்றது ஏன் ?
இந்நிலையில், தமிழ்நாட்டில் புயல் தாக்கும் என்று கடந்த ஒருவார காலமாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசும் முன்னெச்சரிக்கையை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இப்படி பேரிடர் நேரத்தில் அவசரமாக முக்கியமான துறைகளை கவனிக்கும் மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் டெல்லி சென்று, நேற்றே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது? என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர் கே.என்.நேருவாவது ஜல்ஜீவன் திட்ட நிலுவை பாக்கியை கேட்டு மனு கொடுத்ததாக கூறப்படும் நிலையில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவோ நிர்மலா சீதாராமனை ‘மரியாதை நிமித்தமாகவே’ சந்தித்தேன் என்று கூறியுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
மாற்றம் முன்னேற்றம்...😀 pic.twitter.com/YFrKlOcDYF
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) December 2, 2024
நிலுவைத் தொகையை கேட்க நேரில்தான் செல்ல வேண்டுமா ?
தமிழ்நாடு சார்ந்த கோரிக்கைகளை வேறு எந்த நாட்களில் வேண்டுமானாலும் டெல்லி சென்று கொடுக்க முடியும். அதே நேரத்தில் நாடாளுமன்றமும் நடைபெற்று வருவதால், டெல்லி செல்ல முடியாத சூழல் இருந்தால், திமுக எம்.பிக்கள் மூலமாக கூட தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அமைச்சர்களை சந்தித்து உடனடியாக தந்துவிட முடியும். கடந்த காலங்களில் இதுபோன்றும் நடைபெற்றுள்ளது.
ஆனால், நேற்றே தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம், தென்னரசு மற்றும் திமுக எம்.பிக்கள் என ஒரு படையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஏன் சந்திக்க வேண்டும்? என்ற கேள்வியை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பத் தொடங்கியிருக்கின்றன.
மத்திய பாஜக அரசு போதுமான நிதியை தராமல் தமிழ்நாட்டை வஞ்சிகிறது என தொடர்ந்து முதல்வர் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வரும் நிலையிலும் கடிதங்கள் வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலினே தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலிலும் முக்கியமான நேரத்தில், முக்கியமான அமைச்சர்கள் இருவரும் டெல்லி சென்றுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்
இந்நிலையில், நேற்று இரவு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை சீரமைக்க உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இப்படி ஒரு பேரிடர் நேரத்தில் இந்த புயல் பாதிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எடுத்துரைத்தேன் என்றோ, நிலுவை நிதி பற்றியோ அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாக அவர் எதையும் பகிராததும் ‘மரியாதை நிமித்தமாகவே’ மத்திய நிதி அமைச்சரை சந்தித்தேன் என்று அவர் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதையும் மேற்காட்டி எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை எழுப்பி வருகின்றன.