தன் மீதான ஊழல் வழக்கை எஸ்.பி.வேலுமணி சட்டரீதியாக சந்திப்பார்- பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன்
’’அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மாநில அரசு நிறுத்த வேண்டும்; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, அதில் கவனத்தை அதிகம் செலுத்த வேண்டும்’’
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாஜக சார்பில் மாநில சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பாஜக தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமி கலந்து கொண்டு பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை,
தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் கிராமங்களில் பாஜக சார்பில் தன்னார்வலர்கள் குழு அமைக்கப்படும். கொரோனா தொற்றால் இந்தியாவில் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை விட இந்தியால் தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இந்தியாவில் 53 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அதிகமான தடுப்பூசி கொடுத்துள்ளனர் என திமுகவே வாய் தவறி கூறியுள்ளது. மூன்றாவது அலையை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாஜகவை எப்போதும் எதிர்க்கும் திமுக; தற்போது பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசி வருகிறார். தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசி வருகிறார். தன்னார்வலர்கள் குழு வீடு வீடாக சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கிராமத்திற்கு இருவர் நியமிக்கப்படுவார்கள். டிசம்பர் 20ஆம் தேதிக்கு பிறகு கொரோனா இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என அண்ணாமலை பேசினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன்,
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனையானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செயலாக தெரிகிறது. எஸ் பி வேலுமணி அவர்கள் எதையும் சந்திக்க தயார், சட்டரீதியாக சந்திக்க தயார் என்று அவர் சொல்லி இருக்கிறார். அதில் அவர் நிச்சயமாக அவர் சொன்னது போல சட்டரீதியாக அவர் சந்திப்பார். இது போன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மாநில அரசு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். நீங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார் மக்களுக்கு அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அதில் கவனத்தை அதிகம் கொடுத்து அதை நிறைவேற்ற வேண்டும்.
"மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், நமக்கு இதெல்லாம் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆட்சி பொறுப்பினை ஏற்று இதுநாள் வரை அதற்கான எந்தவித சமிக்கையும் தெரியவில்லை. மக்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். வெள்ளை அறிக்கையில் எவ்வளவு கடன் இருக்கிறது, கடந்த அரசாங்கத்தை குறை கூறவே அந்த வெள்ளை அறிக்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
நீங்கள் மக்களிடம் வாக்குறுதிகளைக் கொடுத்து வந்திருக்கிறார்கள், அதை நிறைவேற்ற பாருங்கள், பழிவாங்கும் நடவடிக்கையை மாநில அரசு நிறுத்த வேண்டும் என கே டி ராகவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.